உலகம் முழுவதும் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே உயர்ந்து காணப்படுகிறது.

தமிழகத்தில் தங்க நகை வியாபாரம் என்பது இந்த நிலையாலும், கடந்த மாதம் தேர்தல் கட்டுப்பாடு விதிகள் அமலில் இருந்ததாலும் மந்தமாக இருந்துள்ளது. குறிப்பாக கோவையில் தங்க நகை வியாபாரம் என்பது கிட்டத்தட்ட 70% குறைந்து காணப்பட்டதாக தகவல்கள் வெளியானது. 

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் அதிகம் விற்பனை ஆகும் நாட்களில் அட்சய திருதியை திருவிழா முக்கியமான ஒன்று. இந்த ஆண்டு அட்சய திருதியை திருவிழா நாளை (மே 10) கொண்டாடப்படவுள்ளது.  சரியாக சொல்லவேண்டும் என்றால் மே 10ம் தேதி காலை 4.17 மணிக்கு திரிதியை திதி துவங்கி மறுநாள் மதியம் 2:50 மணிக்கு முடிவடையும்.

வழக்கமாக அட்சய திருதியையின் போது தங்க விற்பனை அமோகமாக இருக்கும். சென்ற ஆண்டு அட்சய திருதியையின் முதல் நாளில் மட்டும் கோவை மாநகரில் ரூ.36 கோடி மதிப்பிலான தங்க நகைகள் (மொத்தம் 60 கிலோ) விற்பனை செய்யப்பட்டது. எனவே இந்த ஆண்டு கோவையில் அட்சய திருதியையின் போது தங்க விற்பனை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் உள்ளது.

இதுகுறித்து கிராஸ் கட் ரோட்டில் அமைந்துள்ள பிரபல நகை கடையின் விற்பனை குழுவிடம் கேட்டதற்கு அவர்கள் கூறியதாவது:-  இன்றைய நிலவரப்படி, 1 கிராம் 22 காரட் தங்கம் கோவையில்  ரூ. 6615 ஆக உள்ளது. விலை உயர்வால் விற்பனை லேசாக பாதிக்கப்பட்டுள்ளது. அட்சய திருதியையை முன்னிட்டு விற்பனை கடந்த ஆண்டை போலவே இதுவரை இருக்கிறது. நாளை அட்சய திருதியை நாளன்று 10% அதிகம் விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கிறோம், என்றார்.

அதுவே, கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராமிடம் கேட்டதற்கு அவர் கூறியது:-

இந்த ஆண்டு அட்சய திரிதியையின் போது தங்கம் வாங்கவேண்டும் என்ற மக்களின் ஈடுபாடு வழக்கமாக உள்ளதை போலவே அதிகமாக இருக்கும், இருந்தாலும் விற்பனை அளவில் மாற்றம் இருக்கும். சென்ற ஆண்டிற்கு இந்த ஆண்டு தங்கம் 18% விலையுயர்ந்துள்ளது என்பதால் கண்டிப்பாக சென்ற ஆண்டு அட்சய திருதியை நாளில் கோவையில் நடைபெற்ற விற்பனையை விட இந்த ஆண்டு 20% விற்பனை குறைவாக தான் இருக்கும், என்றார்.

மத்திய அரசிடம் இதுபோன்ற முக்கிய விழா காலங்களில் மட்டும் தங்கத்தின் இறக்குமதி விலையை 10% குறையுங்கள் என்று கோரிக்கை வைத்துளோம். இப்போது வரை அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை, என்றார்.

நகை தயாரிப்பாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை அரசு ஏற்றால் அதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பது மட்டும்மல்லாது விற்பனையின் மூலம் வியாபாரிகளுக்கு லாபமும், அரசுக்கு அந்த விற்பனைக்கான வரியும் கிடைக்கும்.