வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மாற்றி பழ மார்கெட் காய்கறி மார்கெட் மற்றும் லாரிபேட்டை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என கூறி தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட சுற்று சூழல் பொறியாளருக்கு குறிச்சி - வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு தரப்பில் கடிதம் ஒன்று இன்று அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், வெள்ளலூர் பகுதியில் ஏற்கனவே 1000 டன்னுக்கு அதிகமாக குப்பைகள் தினமும் வந்து சேரும் நிலையில், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மாற்றி அந்த இடத்தில் காய்கறி, பழங்கள் மார்கெட் மற்றும் லாரிபேட்டை அமைப்பதற்கு கடந்த 30/12/24 அன்று கோவை மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் குப்பை கிடங்கால் சுகாதார  நிலைமை ஏற்கனவே மோசமாக இருக்கும் நிலையில்  காய்கறி மார்கெட் இங்கு அமைந்தால் மேலும் இப்பகுதி சுகாதார சீர்கேட்டால் தத்தளிக்கும் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் அண்மையில் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த சில தினங்களில் முன்னர் காய்கறி சங்க நிர்வாகிகளுடன் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் அவர்கள் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் வியாபாரம் செய்ய ஆட்சேபனை தெரிவித்துள்ளதும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆகவே ஏற்கனவே சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த பகுதி மேலும் சுகாதார சீர்கேட்டால் பன்மடங்கு பாதிப்படையும் எனக்கூறி  வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையதை மாற்றியமைக்கும் கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் திட்டத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.