கோவை மாநகரின் பல்வேறு முக்கிய சாலைகளில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பொதுமக்களின் இயல்பான போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிப்படைவது அதிகரித்த படி உள்ளது. இதற்கு மாநகராட்சி விரைந்து தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

இதுபற்றி, FCI சாலை பகுதி அருகே செல்லும் வாகன ஓட்டிகள் சிலரிடம் பேசுகையில், அவர்கள் கூறியது:-

இந்த சாலை மற்றும் இதற்கு அருகே உள்ள சாலைகளில் இறைச்சி கடைகள் சில செயல்படுகின்றன. இந்த கடைகளில் மிச்சமாகும் பொருட்களை இந்த வழியே உள்ள புதர் மற்றும் செடிகளுக்குள் அவர்கள் வீசி சென்று விடுகின்றனர். இதனால் இங்கு தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. இந்த வழியே செல்லும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். வாரத்துக்கு குறைந்தது 2 பேராவது தெருநாய் கடி வாங்கி விடுகின்றனர். 

காந்தி மாநகர் பகுதி அருகே வசிப்பவர்கள் சிலர் கூறுகையில்:-

இரவு நேரத்தில் வேலை முடித்து வீடு திரும்ப தாமதம் ஆகி வரும்போது பொதுமக்கள் சாலை ஓரங்களில் கொட்டும் குப்பைகளை உண்ண நாய்கள் பட்டாளமே அந்த இடத்தில் இருக்கின்றது.அந்த வழியே நடந்து வரும்போது நாய்கள் தொல்லை பெரும்தொல்லையாக உள்ளது.

இங்கு இருந்த உயர் மின் கம்பத்தில் அமைந்திருந்த மின் விளக்குகளும் செயல்படாமல் உள்ளது. மேலும் மரக்கிளைகள் அதிகம் குகை போல் மேல்பகுதியில் மூடியுள்ளதால் சாலை முழுவதுமாக இருட்டு மிகுந்து உள்ளது அச்சத்தை ஏற்படுத்துகிறது. 

சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த மக்களிடம் பேசுகையில் :-

சாலைகளில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளதால் நாங்கள் குழந்தைகளை வெளியே அனுப்புவதை குறைத்துக்கொண்டுள்ளோம். காலை நேரங்களில் சாலையோரம் நடந்து, ஓடி உடற்பயிற்சி செய்கையில் தெரு நாய்கள் துரத்துகின்றன. இரவு நேரங்களில் வெளியே சென்று திரும்பும் போது வாகனங்கள் குறுக்கே நாய்கள் ஒன்றை ஒன்று துரத்தி செல்வதால், வாகனத்தை இயக்குபவர்கள் திடீரென பிரேக் அடித்து கீழே விழும் சூழல் நிலவுகிறது. இது போல பல சிக்கல்க்ளை பொதுமக்கள் எதிர்கொள்கின்றனர்.

1 லட்சம் + தெரு நாய்கள்! என்ன தான் தீர்வு? 

கோவை மாநகரில் 1 லட்சத்திற்கும் அதிகமான தெரு நாய்கள் உள்ளது என்பது 2022ல் கோவை மாநகராட்சிக்காக 'டாக்ஸ் ஆப் கோயம்புத்தூர்' எனும் அரசு சாரா அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

எல்லா தெரு நாய்களையும் மக்கள் தொல்லையாக பார்ப்பதில்லை என்றாலும், அவர்களுக்கு ஏற்படும் இடையூருக்கு தீர்வு கிடைக்கப்படாமல் உள்ளதால், தெரு நாய் விஷயத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நாய்கள் கருத்தடை மையம் கோவை மாநகரில் சீரநாய்கன்பாளையம்  மற்றும் உக்கடம் ஆகிய 2 இடங்களில் உள்ளது. இவற்றில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியை வேகப்படுத்த வேண்டும்.

கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் தலா 1 நாய்கள் கருத்தடை மையம் அமைத்து அதற்கு போதிய பணியாளர்கள் மற்றும் வசதிகளை ஏற்படுத்தினால் தான் தெரு நாய்கள் தொல்லைக்கு தீர்வு கிடைக்கும்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் வெள்ளலூர் குப்பைக்கிடங்கு வளாகத்தில் மற்றுமொரு நாய்கள் கருத்தடை மையம் அமைக்க மாநகராட்சி அடிக்கல் நாட்டியது. 6 மாதத்தில் இதை முடித்து செயல்பாட்டை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது. அப்படி என்றால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதை முடித்திருக்க வேண்டும். ஆனால் பணிகள் நிறைவடையவில்லை. 

மக்களுக்கு வேண்டுகோள்:- தெரு நாய்களிடம் கருணையாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மாநகராட்சி இந்த சிக்கலுக்கு விரைவில் ஸ்மார்ட்டான தீர்வு வழங்கும் என நம்புவோம்.

Pic: Representational. Credits : The Hindu