தமிழகத்தில் ஆண்டிற்கு 15 லட்சம் பேர் மருத்துவ சுற்றுலாவிற்காக மட்டும் வருகின்றனர்! - அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
- by David
- Apr 30,2023
Tamil Nadu
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 28 கோடி பேர் சுற்றுலா வருகின்றனர். அதில் 15 லட்சம் பேர் மருத்துவ சுற்றுலாவிற்கு மட்டும் வருகின்றனர் என்று சென்னையில் நேற்று நடந்த மருத்துவ சுற்றுலா மாநாட்டில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-
தமிழ்நாட்டில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாட்டு கையேட்டினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அந்தக் கையேட்டில் பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் மூலம் இடைத்தரகர்களின் தயவு இல்லாமல் பிற நாட்டை சேர்ந்த மருத்துவ சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் எந்த மருத்துவமனையில் எவ்வளவு கட்டணத்தில் சிகிச்சை பெறலாம் என்ற தகவலை பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.