ஆளுநர் உரையுடன் துவங்கும் தமிழக சட்டமன்ற பேரவையின் முதல் கூட்டத்தில் அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையில் நிறைய பகுதிகளில் உண்மைக்கு மாறான தகவல்கள் உள்ளது என தமிழக ஆளுநர் ரவி தமிழக பேரவையில் இன்று கூறி அதை வாசிக்க மறுத்ததும், சட்டமன்ற கூட்டம் நிறைவடையும் முன்பே சென்றதும் இன்று பரபரப்பாக பேசப்பட்டது.

இதுகுறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:

ஆளுநர் அவருக்கு கொடுத்த உரையில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் கேட்கலாம். உரையில், உண்மைக்கு மாறாக இருக்கிறது. சரியாக இல்லை என்று அவர் கூறினால் அதற்குவிளக்கம் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தமிழ்நாடு அனைத்துவிதத்திலும் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது என்பதை புள்ளிவிவரங்களோடு நாங்கள் சொல்லுகின்றபோது, அதை ஏற்றுக்கொள்கிற மனப்பக்குவமும், அதனைத் தாங்கிக் கொள்கிற சக்தியும் ஆளுநருக்கு இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

தான் ஒரு மாநிலத்தின் தலைவராக, தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு மாநிலம், இந்திய ஒன்றியத்தில் பல்வேறு துறைகளில் முன்னேறி இருக்கிறது, தேசிய அளவில், தமிழ்நாட்டின் GDP உயர்ந்திருக்கிறது, விளையாட்டுப் போட்டிகளில் ஐந்தாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறோம், பல துறைகளில் முதலிடத்திற்கு வந்துள்ளோம், இவற்றையெல்லாம் ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ளவோ, படிக்கவோ மனமில்லாமல், இந்த அரசின் சாதனைகளை தான் வாசிக்க விருப்பமில்லாமல், பொய்யான கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.

தமிழகம் முதன்மையான இடத்தில் உள்ளது என்பதை புள்ளிவிவரத்தோடு நாங்கள் சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம். ஆளுநர் விளக்கம் கேட்டிருந்தால் நிச்சயமாகக் கொடுத்திருப்போம். ஆனால், அவர் ஏதும் விளக்கங்கள் கேட்கவில்லை. அதனால்தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இந்த உரை எனது மனசாட்சிக்கு விரோதமாக இருக்கிறது என்று சொல்லி ஆளுநர் வராமல் இருந்திருக்கலாம்.

தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்றார். ஆனால், மரபுப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும். இதனை கடந்த ஆண்டிலேயே நம்முடைய சட்டப்பேரவைத் தலைவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் அங்கிருக்கக்கூடிய அரசாங்கங்களுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இவற்றையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.