சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வரும் கேரளா அரசை கண்டிக்கும் வகையில் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நாளை (26.4.2023) காலை 10 மணி முதல் கேரளா பேருந்துகள் முன் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இது குறித்த விவரங்கள் பின்வருமாறு:-

 

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. இந்த அணைக்கு வரும் நீர் வரத்தை தடுக்கும் வகையில் கேரள அரசு சார்பில் சிறுவாணி ஆற்றில் 3 இடங்களில் தடுப்பணைகள் கட்ட திட்டமிட்டு ஒரு இடத்தில் கட்டுமான பணிகள் முடியும் நிலையில் உள்ளது.

 

இந்நிலையில், சிறுவாணி ஆற்றில் தடுப்பணைகள் கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து புதன்கிழமை (ஏப்ரல் 26) கேரள பேருந்துகள் முன் மறியல் போராட்டம் நடத்த கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

இக்கூட்டத்தில் தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், தாமஸ் (காங்கிரஸ்), சிவசாமி (இந்திய கம்யூனிஸ்ட்), கணபதி செல்வராஜ் (மதிமுக), இலக்கியன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), இப்ராஹிம்(மனித நேய மக்கள் கட்சி), ஸ்டான்லி (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஆசிப் (எஸ்.டி.பி.ஐ.) உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

நாளை காலை 10 மணி முதல் இந்த போராட்டம் நடைபெற உள்ளது.