சமுதாயத்தில் இயல்பான மனிதர்கள் சந்திக்கக்கூடிய சவால்களை விட சமூகத்தில் போராடி முன்னேற வேண்டும் என்று நினைக்கக் கூடிய திருநங்கைகள் எதிர்கொள்ளும் சவால்கள் சற்று அதிகம் என்று சொல்லலாம். 

 

செல்வி கார்த்திகா ஒரு திருநங்கை. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல சவால்களைக் கடந்து ஒரு சிறிய உணவு கடையை சென்னையில் நடத்தி வந்தார்.

 

வாழ்க்கையில் உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தையும் தன்னம்பிக்கையையும் கொண்டு சில அடிகள் முன்னேறிய அவருக்கு 2015 இல் ஏற்பட்ட வெள்ளம் மீண்டெழ முடியாத ஒரு நிகழ்வாக அமைந்தது.

 

வெள்ளத்தில் கடையின் சமையல உபகரணங்கள் மற்றும் அனைத்து உடைமைகளையும் இழந்த அவர், அன்றிலிருந்து தற்போது வரை பிச்சை எடுத்து தன் வயிற்றை கழுவி வருகிறார்.

 

 

திருநங்கை சௌந்தர்யா கோபி, தன்னுடன் சில திருநங்கைகளை சேர்த்து சிறு தொழில் செய்ய எடுத்த முயற்சி கொரோனா காலத்தில் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தில் நிரந்தரமாக உறங்கிபோனது.

 

ரேஷன் அரிசியும் அரசு, மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியை மட்டுமே நம்பி இருந்தனர்.

 

 

மீண்டும் உழைக்க வேண்டும் என்று இருந்த அவர்கள் அதன் பின்னர் தனியார் நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கிடைத்த உதவியுடன் அந்த ஊரடங்கு காலத்தில் 6 மாதங்களுக்கு தினமும் உணவின்றி சிரமப்படும் 300 நபர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவு சமைத்து, சென்னையைச் சுற்றி இலவச உணவு வழங்கி வந்தனர்.

 

 

கார்த்திகா போன்ற சிலாரால் தொடர்ந்து போராட முடிவதில்லை, சௌந்தர்யா போன்றவர்கள் மீண்டும் உழைக்க காலம் சில வாய்ப்புகளை வழங்குகிறது. உழைப்பால் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் திருநங்கைகள் முன்னேற தடைகள் பல வருகின்றன. தற்போது பருவநிலை மாற்றம் அந்த தடைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

 

கால நிலை மாற்றம் என்பது எங்கோ நடந்து கொண்டிருக்கின்றது என்று நினைத்து கடந்து சென்று கொண்டிருக்க கூடிய காலகட்டங்களில், நாம் அன்றாடம் காணக்கூடிய எளிய நபர்களின் வாழ்க்கையில் அது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் திருநங்கைகள் உரிமை ஆர்வலரும் கலைஞருமான கல்கி சுப்ரமணியம் மற்றும் சகோதரி அறக்கட்டளை இணைந்து சனிக்கிழமை ‘திருநங்கைகளும் கால நிலை மாற்றங்களும்' என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

 

அங்கு இதுபோன்று காலநிலை மாற்றத்தால் திருநங்கைகள் சந்திக்கும் பல பிரச்சனைகள் பற்றி விரிவாக தெரிவிக்கப்பட்டது.

 

 

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நெறிப்படுத்திய கல்கி சுப்பிரமணியம் தன் உரையில் கூறியது:-

 

2004 இல் ஏற்பட்ட சுனாமியின் தாக்கம் திருநங்கை சமூகத்தில் மிக அதிகமாக இருந்தது. நாங்கள் நிவாரண நடவடிக்கைகளில் இருந்து விலக்கப்பட்டோம், தங்குமிடங்களில் பாகுபாடுகளை எதிர்கொண்டோம், மேலும் உயிரை இழந்த திருநங்கைகளின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. பல திருநங்கை குடும்பங்கள் கண்ணுக்குத் தெரியாத நிலையில், நிவாரணப் பொருட்கள் மற்றும் அளவீடுகளை அணுக முடியவில்லை.

 

அதிகரித்து வரும் பருவநிலை நெருக்கடி எனக்கு வருத்தத்தையும் கவலையையும் அளிக்கிறது. இயற்கை பேரழிவுகள் தொடர்பான திட்டங்களை உருவாக்கும் போது மற்றும் நிவாரண பணிகளில் திருநங்கைகளின் நல்வாழ்வை சேர்க்குமாறு அரசாங்கங்களுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம். திருநங்கைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க வேண்டும். 

 

இவ்வாறு தனது உரையில் பேசினார்.

 

பருவநிலை மாற்றத்தின் தாக்கம் இப்படியும் ஒரு சமுதாயத்தின் மீது இருக்கிறது என்பதை இத்தனை நாட்களாக நாம் அறிந்திருப்போமா? 

 

இனி நம்மால் முடிந்தவரை இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படவேண்டும் என்பதே இவர்களின் வேண்டுகோள்.