2024ம் ஆண்டில் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட கோவை சிங்காநல்லூர் மேம்பால திட்டம் 2025 ஆகியும் இன்னும் துவங்காமல் அப்படியே இருப்பதால், இந்த திட்டம் இந்த ஆண்டிலாவது துவங்கப்படுமா என பொதுமக்களிடம் கேள்வி எழுந்துள்ளது.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் 2.4 கிமீ தூரத்திற்கு உழவர் சந்தை - ஜெய் சாந்தி தியேட்டர் இடையே மேம்பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலைத்துறையின் தேசிய நெடுஞ்சாலைத் துறை பிரிவு இதுவரை 5 முறை டெண்டர் விட்டு அதை எடுக்க யாரும் முன்வரவில்லை.
சிங்காநல்லூர் மேம்பால திட்டத்தை ரூ. 110.8 கோடியில் செயல்படுத்திட மத்திய அரசு 2022ல் ஒப்புதல் வழங்கியது. ஆனால் மெட்ரோ ரயில் திட்டம் திருச்சி சாலை வழியே வருவதால் இங்கு மேம்பாலம் கட்டும் பணி தள்ளிப்போனது. அதற்கடுத்து மெட்ரோ ரயில் திட்டம் முதலில் அவிநாசி சாலை மற்றும் சத்தி சாலை வழியே தான் அமைக்கப்படவுள்ளது என்பதால் மெட்ரோ இந்த மேம்பாலத்திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கப்போவதில்லை என்பதால் டெண்டர்கள் விடப்பட்டன.
ஆனால் 2022ல் ரூ.110.8 கோடியில் செயல்படுத்தலாம் என ஒப்புதல் கொடுக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது அதே தொகையில் செயல்படுத்த முடியாது என்ற நிலை உள்ளது. .ஏனென்றால் கட்டுமான பொருட்கள் எல்லாமே பல மடங்கு விலையேறிவிட்டன. எனவே இந்த மேம்பால திட்டத்திற்கான டெண்டரை இந்த மதிப்பீட்டில் எடுக்க அனுபவமிக்க பெரிய நிறுவனங்கள் எதுவும் முன் வராமல் இருந்தன.
இந்நிலையில் இந்த மேம்பால திட்டத்தின் மதிப்பீட்டு தொகையையும், அதன் வடிவமைப்பையும் திருத்தம் செய்யும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் இறங்கி உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய தொகையை விட குறைந்தபட்சம் 15% அதிகமாக மதிப்பீட்டு தொகையை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அவ்வாறு திருத்தம் செய்தபின்னர், மத்திய அரசின் ஒப்புதலை பெற்று மறுபடியும் டெண்டர் விடப்படும்.
என்னாச்சு கோவை சிங்காநல்லூர் மேம்பால திட்டத்திற்கு?
- by David
- Jan 11,2025