காந்தி ஜெயந்தி அன்று தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முறையாக அரசு விடுமுறை வழங்கப்படுகிறதா என்பது குறித்த ஆய்வு இன்று கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.

கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் அனைத்து தொழிலாளர் உதவி ஆய்வர்கள் இணைந்து கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும் மேட்டுபாளையம் பகுதிகளில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உட்பட 218 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது காந்தி ஜெயந்தி தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல், சம்பந்தப்பட்ட ஆய்வாளருக்கு உரிய படிவத்தில் முன்னறிவிப்பு அளிக்காமல், தொழிலாளர்கள் அன்றைய தினம் பணிபுரிய அனுமதித்த 103 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 86 உணவு நிறுவனங்கள் உட்பட மொத்தம் 189 உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது.

தவறு இழைத்த நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் எண்ணிக்கையை பொறுத்து குறைந்தபட்சம் ரூ.500/- லிருந்து அதிகபட்சமாக ரூ.10,000/-வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும் தொழிலாளர்களை பணிக்கமர்த்திய நிறுவனங்கள் அடுத்த மாதம் ஆய்வு செய்யப்பட்டு உரிய மாற்று விடுப்போ (அல்லது) இரட்டிப்பு ஊதியமோ வழங்கப்பட்டுள்ளதா? என மீண்டும் ஆய்வு செய்து முரண்பாடுகள் கண்டறியப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.