கடந்த 21.9.25 (ஞாயிறு) அன்று கோவை பூ மார்க்கெட் வளாகத்திற்கு ஜனனி எனும் கோவையில் வசிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் ஸ்லீவ் லெஸ் உடை (கை பக்கங்களில் துணியால் மூடப்படாத  உடை) அணிந்து வந்ததற்கு அங்கிருந்த பூக்கடை வியாபாரி ஒருவர், இங்கு இதற்கு முன்பு இது போன்ற "அரைகுறை" உடை உடுத்தி வந்ததால் அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது என அந்த பெண் அணிந்த உடையை வைத்து கருத்து தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து அந்த பெண் தான் உடுத்திய உடை நாகரீகமாக தான் உள்ளது என கூறியதுடன், தனது உடை என்பது தனது உரிமை எனவும், மார்க்கெட்டுக்கு வரும் யாரிடமும் இப்படி பேசவேண்டாம் என கூறி விவாதம் செய்துள்ளார்.

அந்த வியாபாரிக்கு ஆதரவாக அங்கு மேலும் சில வியாபாரிகள் வந்து அந்த பெண்ணிடமும் அவருடன் வந்த நண்பருடனும் விவாதம் செய்த சம்பவம் சமூகவலைத்தளத்தில் வைரல் ஆனது. இது உள்ளூரில் மட்டுமல்ல தேசிய அளவில் செய்தியும் ஆனது.

பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து போலீசில் புகாரளிக்க, வியாபாரிகள் தரப்பிலும் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் தாங்கள் மார்கெட்டுக்குள் வந்து பூக்களை வீடியோ எடுக்கவேண்டாம், நவராத்திரி சீசன் என்பதால் பரபரப்பாக உள்ள சந்தையில் இதனால் இடையூறு ஏற்படும் என்று தான் கூறியதாகவும், விவாதத்தில் தனக்கு சாதகமான பக்கத்தை மட்டும் அந்த பெண் மற்றும் அவரின் நண்பர் வெளியிட்டுள்ளனர் என கூறி இருந்தனர்.

இந்த நிலையில், இது பற்றி கோவை மாநகர் மாவட்ட அனைத்து மலர் வியாபாரிகள் சங்கம் சார்பில் விசாரணை நடைபெற்றபோது, விமர்சனம் செய்யப்பட்ட பெண் வீடியோ எதுவும் அங்கு எடுக்கவில்லை என தெரிந்துகொண்டதாகவும், வியாபாரிகள் சிலரால் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு தங்களுடைய வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளனர். இதுபோன்ற சம்பவம் இனி கோவை பூ மார்க்கெட்டில்  நடைபெறாது எனவும் அவர்கள் அறிக்கை மூலம் கூறியுள்ளனர்.

இச்சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பெயருடன் இவ்வறிக்கை வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.