தமிழ் நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இந்த ஆண்டு துவக்கத்தில் ஆசியாவிலேயே மிக உயர முருகர் சிலை கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலையில் அமைக்கப்படும் என அறிவித்தார்.

மருதமலை அடிவாரத்தில் இருந்து சுமார் 180-185 அடி உயரம் கொண்டதாக அமையவுள்ள இந்த சிலை ஆசியாவில் மட்டும் அல்ல, உலகிலேயே மிக பெரிய முருகர் சிலையாக இருக்கும். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.146.83 கோடி எனவும் இதில் சிலை மட்டும் ரூ.110 கோடியில் அமையும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த திட்டத்தில் அருங்காட்சியகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பிற பொது அடிப்படை வசதிகளும் அடங்கும்.

இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் சமீபத்தில் துவங்கியது. சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் வெளிவந்த தகவல் அடிப்படையில் சிலையை நிறுவ பேருந்து நிலையத்திற்கு பின் பகுதியில் காலியாக உள்ள 2.5 ஏக்கர் நிலம் தேர்வாகி உள்ளது எனவும், திட்டத்திற்கு கூடுதல் நிலம் தேவைப்படலாம் என்பதால் அதற்கு பக்கத்தில் வரும் 2.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

மருதமலையில் 'லிப்ட்' பணிகள் எப்படி போகிறது ?

கோவை மருதமலை முருகர் கோவிலில் பக்தர்கள் நலனுக்காக இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ரூ.5.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் 'லிப்ட்' பணிகள் இறுதி நிலையை எட்டியுள்ளது. ஓரிரு மாதங்களில் இந்த பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். 

மருதமலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் மற்றும் மலைப்பாதை வழி உள்ளது. அடிவாரத்தில் இருந்து 700-850 படிகள் உள்ளன. இதை பயன்படுத்தி மேலே செல்பவர்களும் உள்ளனர், அதேபோல மலைப்பாதை வழியில் வாகனத்தில் செல்பவர்களும் உள்ளனர். இந்த வழிகளை பயன்படுத்தி பக்தர்கள் வாகனநிறுத்துமிடத்திற்கு வந்தால், அங்கிருந்து 150 படிக்கட்டுகளை ஏறி கோவிலுக்கு செல்ல முடியும்.

பக்தர்கள், குறிப்பாக முதியவர்கள் 150 படிக்கட்டுகளை ஏறி வருவதை விட லிப்ட் மூலம் கோவிலுக்கு வர வசதி செய்ய அரசு முடிவு செய்து பணிகளை நடத்தி வருகிறது. இந்த பணிகளுக்கு ஏப்ரல் 2023ல் முதலமைச்சர் அடிக்கல் நாடினார். இந்த திட்டத்தின் மூலம், 2 'லிப்ட்' கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு லிப்ட்டிலும் 20 பேர் ஒரே நேரத்தில் ஏறி மேலே செல்ல முடியும். முதல் லிப்ட் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து 14 மீட்டர் மேலே பக்தர்களை சுமந்து செல்லும். அங்கிருந்து 35 மீட்டர் நடந்து சென்று இரண்டாம் லிப்ட்-டை பயன்படுத்தி கோவிலுக்கு செல்ல முடியும்.

தற்போது முதல் லிப்ட் பணிகள் முடிவு பெற்றுள்ளது. இரண்டாம் லிப்ட் பணிகள் சற்று  மீதம் உள்ளது. லிப்ட் வசதி அமையும் நிலத்தின் அடித்தள பகுதியில் பணிகளை மிக கவனத்துடன் கையாள வேண்டும் என்பதால் பணிகள் நிதானமாக நடக்கிறது. அடுத்த 2 மாதத்தில் பணிகளை முடிக்க வாய்ப்புள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.