வரும் மார்ச் மாதத்துடன் 2022 - 23 நிதியாண்டு முடிவடைகிறது. அதற்குள் சொத்து வரியாக ரூ.344 கோடியை கோவை மாநகராட்சி வசூலிக்க வேண்டும். 

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் மொத்தம் 5,46,611 சொத்து வரிதாரர்கள் இருக்கின்றனர்.

இவர்களில் குறைவான பேர் தான் வரிசெலுத்தியுள்ளனர். இதுவரை ரூ.197 கோடி ரூபாய் மட்டும் வசூலாகியுள்ளது. 

வரி மூலமாகவே கோவை மாநகராட்சியின் பணிகள் நடைபெறுவதால் விரைந்து வரிகளை வசூலிக்க வரிதாரர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று வசூலில் ஈடுபடவும் சிறப்பு முகாம்கள் வாயிலாகவும் வரி வசூலிக்க மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் உத்தரவிட்டார். 

இருந்தும் பொதுமக்கள் வரி செலுத்துவதில் அலட்சியமாக இருப்பதால் சில அதிரடி நடவடிக்கைகள் துவங்கவுள்ளது.

இதுதொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் கூறுகையில்:-

மாநகராட்சியில் வரி செலுத்தாத 'டாப் 100' பேரின் பட்டியல் தயாராகி வருகிறது. பலரும் வரி செலுத்த ஆரம்பித்து விட்டனர்.

வரி செலுத்தாத நபர்களுக்கு முதலில் நோட்டீஸ் வழங்கப்படும். அதன் பிறகு சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். கடைசியில் சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளோம். எனவே வரியினங்களை உரிய நேரத்தில் செலுத்தி மாநகராட்சியின் நடவடிக்கைகளை தவிர்க்கலாம் என்று மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.


Source: TOI Samayam