பெல்ஜியம் நாட்டை சேர்ந்த வெர்லின்வெஸ்ட் எனும் தனியார் முதலீட்டு நிறுவனத்தின் இந்திய பிரிவிடம் இருந்து தனது 20% பங்குகளுக்கு பதில் ரூ.650 கோடியை ($ 75 மில்லியன்) முதலீடாக பெற்றுள்ளது கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல 'தி ஐ பவுண்டேஷன்' கண் மருத்துவமனை குழுமம்.

இந்த முதலீடு மூலம் முற்றிலுமான புது மருத்துவமனைகளை கட்டவும், ஏற்கனவே உள்ள மருத்துவ வளாகங்களை கையகப்படுத்தவும் 'தி ஐ பவுண்டேஷன்' கண் மருத்துவமனை குழுமம் திட்டமிட்டுள்ளதாக 'தி இந்து பிஸ்னஸ் லைன்' நாளிதழ் கூறியுள்ளது.

கோவையை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு உள்பட கேரளா, கர்நாடகாவில் 'தி ஐ பவுண்டேஷன்' கண் மருத்துவமனை குழுமம் தங்களது 25+ மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. கண் சிகிச்சை தேவைப்படும் அனைவராலும் அணுகக்கூடிய வழியில் சேவைகளை இந்த மருத்துவ குழுமம் அதன் மருத்துவமனைகள் மூலம் வழங்கி வருகிறது.

தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்த முதலீட்டின் மூலம் ஆழமாக செல்லவும், பிற தென் மாநிலங்களிலும், மேற்கு இந்திய பகுதிகளில் விரிவாக்கம் செய்ய திட்டமும் உள்ளதாக இந்த குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஷ்ரேயஸ் ராமமூர்த்தி கூறியுள்ளார்.