கோவையில் 10 கிலோமீட்டர் மேம்பாலம் திறந்த பின்னரும் இந்த பிரச்சனை இன்னும் தீரவில்லை!
- by David
- Oct 22,2025
கோவை மாநகரின் அவிநாசி சாலையில் 10 கிலோமீட்டர் நீளத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது.
மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் போக்குவரத்து மேலாண்மைக்கு இருந்த டிராபிக் சிக்னல்கள் அகற்றப்பட்டு அங்கு, யு டர்ன்கள் கொண்டுவரப்பட்டது. இந்த நடைமுறை இன்றும் உள்ளது.
மேம்பாலத்தின் மேலே பயணிப்பவர்கள் எளிதில் பயணத்தை முடித்துக்கொள்கின்றனர். கீழே பயணம் செய்பவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடம் அருகில் இருந்தாலும் அதை அணுக முடியாத நிலை உள்ளதால் நீண்ட தூரம் சென்று திரும்பி வரவேண்டிய சூழல் உள்ளது.
உதாரணத்திற்கு கோவை பீளமேடு காவல் நிலையம் பகுதியை எடுத்துக்கொண்டால், காவல் நிலையம் எதிரே தான் பி.எஸ்.ஜி.மருத்துவமனை, ஃபன் மால், ஜி.வி.ரெசிடென்சி பகுதிகள் செல்ல சாலை வசதி உள்ளது. இங்கு இதற்கு முன்பு டிராபிக் சிக்னல் இருந்தது. அப்போதெல்லாம் வாகனஓட்டிகள் எளிதில் சிக்னலில் இருந்து திரும்பி பாதுகாப்பாக இந்த பகுதிகளுக்கு சென்றனர்.
ஆனால் இப்போது காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள இந்த சாலை தடுப்புகள் கொண்டு மூடப்பட்டுள்ளதால் இங்கிருந்து கிட்டத்தட்ட ஜி.ஆர்.ஜி. கல்லூரி வரை சென்று தான் வாகனத்தை திருப்பிக்கொண்டு வரவேண்டிய நிலைமை உள்ளது.
இங்கு மட்டும் இந்த சிக்கல் கிடையாது. பாரதி காலனியில் இருந்து ஹரிபவனம் உணவகம் வழியே வந்தால் அங்கிருந்து டிராபிக் சிக்னலில் நின்று, சாலையின் மறுபக்கம் செல்லமுடிந்தது. இப்போது அவ்வாறு நிலைமை இல்லை. அங்கிருந்து எஸ்.எம்.எஸ். ஹோட்டல் வரை சென்று யு டர்ன் செய்து தான் சாலையின் மறுபக்கம் உள்ள இடத்திற்கு செல்லவேண்டிய நிலை உள்ளது.
அதே போல ஹிந்துஸ்தான் கல்லூரியில் இருந்து ராமகிருஷ்ணா கல்லூரி சாலை செல்ல முன்பு எளிதாக டிராபிக் சிக்னலில் நின்று செல்ல முடிந்தது.
இப்போது அலெக்ஸாண்டர் குதிரையேற்ற பள்ளி வரை சென்று அங்குள்ள யு டர்ன்னை பயன்படுத்தி பயணித்தால் தான் போக முடியும்.
இதனால் நேரம், பெட்ரோல் தான் வீணாகிறது. யு டர்ன் மூலம் ஒன் வே பயணங்கள் அதிகரித்துள்ளது என்பதை பலமுறை எடுத்து சொல்லியுள்ளோம்.
டிராபிக் சிக்னல் மீண்டும் நிறுவப்பட்டு, அங்கு போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தால் வாகனங்களில் அதிவேகமாக செல்பவர்களுக்கு அச்சம் இருக்கும், பாதசாரிகளுக்கு டிராபிக் சிக்னலும், போலீசாரும் இருப்பது பாதுகாப்பாக இருக்கும்.