தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்விற்காக கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளார்.

இதற்காக அவர் வரும் செவ்வாய் (22.7.25) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை வருகிறார்.

கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் அவர், வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை வளாகத்தை திறந்து வைக்கிறார். இதன் பின்னர் அவர் கோவில்வழி புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார். அதை தொடர்து மடத்துக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் 'கலைஞர்' கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.

ஜூலை 23 ஆம் தேதி பொள்ளாச்சிக்கு செல்லும் முதலமைச்சர் பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம் நிறைவேற காரணமாக இருந்த 'பெருந்தலைவர்' காமராஜர், முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.கே. பழனிசாமி மற்றும் 'அருட்செல்வர்' நா.மகாலிங்கம் ஆகியோருக்கு சிலை அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இப்பணிகள் நிறைவேறும் நிலையில் உள்ளது.

இந்த அரங்குகள் மற்றும் உருவ சிலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சியில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அன்று மாலை அவர் மீண்டும் சென்னை திரும்புகிறார். திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் முதலமைச்சர் சாலை வலம் (ரோட் ஷோ) செல்லவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த இரு நாட்களும் இரு மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.