சில மாதங்களுக்கு முன்பு வரை நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து செயலபட்ட கோவையை சேர்ந்த  வைஷ்ணவி 3 மாதங்களுக்கு முன்பு திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைந்து கொண்டார்.

அப்போது அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. சுயநலத்திற்காக அவர் கட்சி மாறினார் என விமர்சனம் வந்தது. சில சமூக வலைதள கணக்குகளில் இருந்து கண்ணியமான கருத்துக்கள் எழவில்லை. கொச்சையாக சிலர் பேசினர். இது போன்று தொடர்ந்து அவர் மேல் விமர்சனம் செய்யப்பட்டு வந்தது.

இதுகுறித்து இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் அவர் புகார் தெரிவித்தார். அதில் அவர் த.வெ.கவில் இருந்து வெளியேறியது முதல் தன்னை பற்றி த.வெ.க.வினர் சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும் அவதூறாகவும் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள் எனவும், இது சம்பந்தமாக த.வெ.க தலைவர் விஜய் கண்டன அறிக்கை வழங்குவார் எனவும் தான் எதிர்பார்த்ததாகவும், இதுவரை அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்பதாலும், இனி மேல் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்பதாலும், த.வெ.க. தொண்டர்கள் மற்றும் அக்கட்சியின் தலைவர் விஜய் மீதும் தான் புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார். 

விமர்சனம் செய்தவர்கள் மேல் புகார் கூறுவதுடன் தலைவர் விஜய் மேலும் புகார் தெரிவிப்பது அரசியல் லாபத்திற்காக மற்றும் சுய விளம்பரத்திற்காக தானா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "விளம்பரத்திற்காக இவ்வாறு நிச்சயமாக புகார் தெரிவிக்கவில்லை. அரசியல் களத்தில் நியாமான விவாதத்தை முன்னெடுத்து வைத்துளேன். எனவே இது கவனத்தை ஈர்க்கும் செயல் என பார்க்கவேண்டாம் என அவர் கூறினார்.

சமூக வலைத்தளத்தில் தனிப்பட்ட நபர்கள் யாரெல்லாம் த.வெ.க.விற்கு ஆதரவு கொடுத்துள்ளார்களோ அவர்களை விஜய் 'வெர்சுவல் வாரியர்ஸ்' என அழைக்கிறார். இதுபோன்று அவதூறு பேசும் நபர்களை எச்சரித்து அவர் அறிக்கை ஏன் வெளியிடவில்லை என அவர் கேள்வியெழுப்பினர்.