கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, ஹைதராபாத், மும்பை, டெல்லி, பெங்களூரு, பூனே, கோவா, அகமதாபாத் ஆகிய உள்ளூர் நகரங்களுக்கும், சிங்கப்பூர், அபுதாபி, ஷார்ஜா போன்ற சர்வதேச பகுதிகளுக்கும் விமான சேவை இயக்கத்தில் உள்ளது.

2025 நிதியாண்டில் முதல் மாதமான 1.4.2025 முதல் 30.9.2025 வரை கோவை சர்வதேச விமான நிலையத்தை 17.5 லட்சத்துக்கும் மேலான பயணிகள் பயன்படுத்தியுள்ளனர் என தகவல் வெளிவந்துள்ளது.

இந்த 6 மாத காலத்தில் பயணித்த உள்ளூர் பயணிகள் 15,98,414 பேராகவும், சர்வதேச பயணிகள் 1,60,597 ஆகவும் உள்ளனர். மொத்தம் 17,59,011 பேர் இந்த இடைப்பட்ட காலத்தில் பயணித்துள்ளனர். 2024 நிதியாண்டில் இதே காலத்தில் பயணித்தவர்கள் 15,80,102 பேர். சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு கோவை சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்திய பயணிகள் சதவீதம் 11% ஆக அதிகரித்துள்ளது.

கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அதற்கான நிலங்களை மத்திய அரசின் விமான நிலைய ஆணையத்திடம் வழங்கி உள்ளது. பணிகள் துவங்க சில காலம் எடுக்கும். எனவே இடைக்கால நடவடிக்கையாக விமான நிலையத்தின் திறனை மேம்படுத்தினால் கூடுதல் விமானங்கள் மற்றும் பயணிகளை கையாள முடியும் என தொழில்துறையினர் கூறுகின்றனர்.

இது குறித்து மேலும் கொங்கு குளோபல் ஃபோரம் இயக்குனர் சதிஷ் கூறுகையில் :

கோவையிலிருந்து, டெல்லி, பூனே, சென்னை, கோவா போன்ற நகரங்களுக்கு கூடுதல் விமான சேவை வழங்கப்பட்டால் அவை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளப்படும் எனவும் தெரியவருகிறது. அதேபோல கோவையிலிருந்து கொழும்பு, பாங்காக், துபாய், தோஹா போன்ற சர்வதேச நகரங்களுக்கு விமான சேவை வேண்டுமென கோரிக்கை விடுத்துளோம். இதற்கு சாதகமான பதிலை விமான போக்குவரத்து அமைச்சகம் வழங்கும் என எதிர்பார்க்கின்றோம். 

இவ்வாறு கூறினார்.

சமீபத்தில் குடியரசு துணை தலைவர் கோவை வந்தபோது, கோவையின் விமான நிலைய விரிவாக்கம் மற்றும் கூடுதல் சர்வதேச விமான சேவைகள் கிடைக்க தனது ஒத்துழைப்பு இருக்கும் என கூறியது குறிப்பிடத்தக்கது.