கோவை வந்த குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை மாநகரில் தனக்கு வழங்கப்பட வரவேற்பையும், கொடிசியா அரங்கில் நடைபெற்ற விழாவில் தனக்கு கோவை தொழில்துறையால் வழங்கப்பட பாராட்டுகளையும் ஏற்றுக்கொண்டார். 

இதன் பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், தனது பொது வாழ்க்கை கோவை மண்ணில் இருந்து தான் துவங்கியது என கூறினார். வாழ்க்கையில் வெற்றிகளும் தோல்விகளும் மாறி மாறி வரும் ஆனால் யார் ஒருவர் அதை முழு மனதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு இறுதியில் வெற்றி தான் வந்து சேரும் என்பதை தான் உணர்ந்துள்ளதாக கூறினார். 

தன்னுடைய வாழ்க்கையில் கிடைத்த உயரங்களுக்கு கோவை மாநகரம் அதன் மக்களும் காரணம் என்று அவர் பெருமையாக கூறினார். குடியரசு துணைத் தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை தனது வெற்றியாக காணாமல் கோவை மாநகருக்கும் கொங்கு மண்டலத்திற்கும் கிடைத்த பெருமையாக பார்ப்பதாக அவர் கூறினார். 

இதன்பின்பு சில முக்கிய தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். தான் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்ற பின்பு ரயில்வே அமைச்சரை சந்தித்து எர்ணாகுளம் மற்றும் பெங்களூரு இடை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் ஜவுளி மண்டலமாக கருதப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய இடங்களில் நின்று செல்ல வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் விரைவில் இந்த வசதி வழங்கப்பட உள்ளது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், விமான நிலைய விரிவாக்கம் ஏற்படுவதால் என்ன தொழில் வளர்ச்சி வந்துவிடும் என்ற கேள்வி இருக்கிறது. அதற்கு ஒரு மிக சிறந்த பதில் என்னவென்று கேட்டால் பெங்களூரு தான் என்றார். கர்நாடகா மாநிலத்தின் மகத்தான வளர்ச்சிக்கு மிகப்பெரிய பெங்களூர் விமான நிலையத்தினால் சாத்தியமானது. 

ஒரு பகுதியினுடைய வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டும் என்றால் அந்த பகுதிக்கு வந்து செல்ல கூடிய போக்குவரத்துக்கு வசதிகள் மேம்பட வேண்டும். அடிப்படை கட்டுமானங்கள் பெருகாமல் பொருளாதார வளர்ச்சி என்பது குறிப்பிட்டு அளவிற்கு வளர்ந்த பின்னர் அப்படியே நின்றுவிடும். எனவே கோவை விமான நிலையத்தை விரிவாக்குவது மட்டுமல்லாமல் பல சர்வதேச விமானங்கள் கோவை மாநகரத்துக்கு வந்து செல்ல வேண்டும். அதுதான் தொழில் வளர்ச்சிக்கு உதவும். அதற்கு தான் உறுதுணையாக இருப்பேன் என அவர் கூறினார்.