நைசாக குப்பைகளை சாலைகளில் வீசி செல்லும் நபர்கள் கவனத்திற்கு !
- by David
- Jul 09,2025
கோவை மாநகரில் குப்பை தொட்டிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு 1 ஆண்டுக்கும் மேலாகிறது. குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று கலந்து வருவதால், அவற்றை மாநகராட்சியால் முறையாக மேலாண்மை செய்ய முடியாமல் போகிறது.
எனவே மக்கள் தினமும் காலை நேரங்களில் தங்களின் வீடுகளுக்கு வந்து குப்பைகளை பெறும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து கொடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் மாநகரின் பெரும்பான்மையான இடங்களில் குப்பைகள் சாலைகளில் சிதறவிடப்படுகிறது. இல்லத்தரசிகள் இரவு நேரங்களில் குப்பை கூடைகளை கூசாமல் சாலைக்கு எடுத்து வந்து எங்கே குப்பை தொட்டி இருந்ததோ அந்த இடத்தில் கொட்டிவிட்டு ஜாலியாக செல்கின்றனர். குடும்ப தலைவர்கள் காலை நேரத்தில் வேலைக்கு செல்லும்போது குப்பைகளை பிளாஸ்டிக் கவரில் போட்டுகொண்டு, போகும் போக்கில் வீசிவிட்டு பறந்து விடுகின்றனர்.
எத்தனை முறை சொன்னாலும் கேட்காத நபர்களுக்கு பாடம் கற்பிக்கவும், இனி மாநகரில் உள்ள சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படாமல் இருக்கவும் இதற்கு முன்பு எங்கெல்லாம் இதுபோல விதிமீறல் ஏற்பட்டதோ அந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள் குறித்து ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்தி கண்காணித்திடவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவறுத்தினார்.
வார்டு எண்.42க்குட்பட்ட கோவில் மேடு, திலகர் நகர் பகுதியில்,சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்கைகளை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை சிசிடிவி பொருத்தி கண்காணித்து, குப்பை கொட்டு நபர்களுக்கு அபராதம் விதிக்கவும் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஏற்கனவே சரவணம்பட்டி, காட்டூர், ராம் நகர், சோமசுந்தரா மில் ரோடு, சிங்காநல்லுார் - வெள்ளலுார் செல்லும் ரோடு, கள்ளிமடை காமாட்சியம்மன் கோவில் பின்புறம், நஞ்சப்பா நகர், நஞ்சுண்டா புரம் ரயில்வே பாலம் கீழ் பகுதி என பல்வேறு இடங்களில் விதிமீறல் நடைபெறுவது கவனிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கும்
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், தொடர்ந்து, இது போன்ற கண்காணிப்பு கேமரா பொருத்தி நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி முயன்றால் நகரம் தூய்மையாகும். பொறுத்திருந்து பாப்போம்...