மாட்டு இறைச்சி வாங்கி பணம் தராததால் ஏற்பட்ட மோதல் – இரட்டை கொலை வழக்கில் 5 பேருக்கு  இரட்டை ஆயுள் தண்டனை

கோவையில் மாட்டு இறைச்சி வாங்கிய பின்னர் பணம் தொடர்பான தகராறில் ஏற்பட்ட மோதலில், கடை உரிமையாளர் உட்பட இருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவை என்.எச். சாலை அருகே திருமால் வீதியைச் சேர்ந்தவர் மொய்தின் பாஷா. இவர் அதே பகுதியில் மாட்டிறைச்சி கடை நடத்தி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு, இதே பகுதியை சேர்ந்த சாதிக் அலி, அவரது கடையில் இருந்து 4 கிலோ மாட்டிறைச்சி வாங்கிவிட்டு பணம் தராமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மொய்தின் பாஷா, சாதிக் அலியைத் தொடர்பு கொண்டு பணம் கேட்டபோது, இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரவு நேரத்தில் இடையார் வீதி சந்திப்பில் சந்திப்பதாகச் சொல்லி சாதிக் அலி அழைப்பை துண்டித்ததாக தகவல். 

அந்த இடத்துக்குச் சென்ற மொய்தின் பாஷா மற்றும் அவரின் நண்பர் அபி முகமத் ஆகியோர் மீது, சாதிக் அலி மற்றும் அவருடன் இருந்த மன்சூர் அலி, அஷ்ரப், ஷேக் அலி, ஜாகீர், அஸ்கர் அலி ஆகியோர் இணைந்து கத்தியால் சரமாரியாக தாக்கியதாக குற்றச்சாட்டு. 

இதில் கடுமையாக காயமடைந்த மொய்தின் பாஷா அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அபி முகமத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில், ஒருவர் 2019 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.மீதமுள்ள 5 பேரான சாதிக் அலி, அஸ்கர் அலி, மன்சூர் அலி, ஜாகீர் உசேன், அசாருதீன் ஆகியோருக்கு, கோவை ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.4,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.

கோவையில் சிலிண்டர் திருடிய இளைஞர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடிவரும் போலீசார்

கோவை உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியில் இன்று காலை  எரிவாயு சிலிண்டர் திருட்டு சம்பவம் நடைபெற்றது.அப்பகுதியில் உள்ள தனியார் இன்டேன் எரிவாயு விநியோக நிறுவனம் தினசரி, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் சிலிண்டர்களை முன்பாகவே ஒரே இடத்தில் அடுக்கி வைக்கும் நடைமுறை பின்பற்றி வருகிறது. அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு, முன்பதிவு செய்தவர்களின் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் சந்தேகத்திற்கிடமாக அங்கிருந்தனர். சில நிமிடங்களில் அவர்கள் வாகனத்தை நிறுத்தி, அங்கு இருந்த சிலிண்டர் ஒன்றை தூக்கிக்கொண்டு பைக்கில் ஏற்றி தப்பிச் சென்றனர்.

அந்தச் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.பின்னர் சம்பவம் குறித்து அந்நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.அருகிலுள்ள சாலைகளிலும், கடைகளிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

திருடர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண் மற்றும் முக அடையாளங்கள் வைத்து அவர்களை அடையாளம் காண முயற்சிகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் உக்கடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தங்களது பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.