கோவை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள் சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழே வருகின்றது. கோவை ரயில நிலையம்  (Coimbatore Railway Junction) ஆண்டுக்கு 2 கோடிக்கும் அதிகமானோரை கையாளுகிறது.

2023-24 நிதியாண்டில் டிக்கெட் விற்பனை மூலமாக மட்டும் நிலையத்தின் வருவாய் ரூ.345 கோடியாக இருந்தது. ரிசர்வ்  பயணிகள் - 47.15 லட்சத்துக்கும் அதிகம். இவர்கள் வாங்கிய டிக்கெட் மூலம் கிடைத்த வருவாய் ரூ.283.96 கோடிக்கும் அதிகமானது. அன்ரிசர்வ்ட் பயணிகள் - 55.60 லட்சத்துக்கும் அதிகம். இவர்கள் வாங்கிய டிக்கெட் மூலம் கிடைத்த வருவாய் ரூ.61.35 கோடிக்கும் மேல்.

இந்த நிலையில் நேற்று சேலம் ரயில்வே கோட்டத்தின் மேலாளர் பன்னா லால் உடன் கோவை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் 'கணபதி' ராஜ்குமார் கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு தேவைப்படும் ரயில் சேவைகளை வழங்க வேண்டும் என மக்கள் சார்பாக தனது கோரிக்கையை சமர்ப்பித்தார்.

கோவை ரயில்வே நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிகத்து வரும் நிலையில் இதற்கேற்ப அடிப்படை வசதிகள் வழங்குவது, ரயில் நிலையத்தின் 2 நுழைவு பகுதிகளில் அருகே போக்குவரத்து நெரிசலை குறைப்பது ஆகியவை பற்றி கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு ஆகியோருடன் 'கணபதி' ராஜ்குமார் எம்.பி., சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பன்னா லால் ஆலோசனை நடத்தினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை 'கணபதி' ராஜ்குமார் எம்.பி., சந்தித்தபோது, கோவையிலிருந்து மதுரை வழியே தூத்துக்குடி, திருச்செந்தூருக்கும், கோவையிலிருந்து திருச்சி வழியே வேளாங்கண்ணிக்கு ரயில் சேவை வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். 

தினமும் இரவு நேரத்தில் கோவையிலிருந்து பெங்களூருக்கு ரயில் சேவை வேண்டும் எனவும், சேலம்-கோவை-ஈரோடு வழியே மேமு ரயில் சேவை தேவை எனவும், கோவை - பொள்ளாச்சி இடையே தினமும் 4 சேவைகள் வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

கோவை ரயில் நிலையத்தில் கூடுதல் எஸ்கலேட்டர், குடிநீர், கழிவறை வசதி வேண்டும் எனவும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ரயில்வே போலீசார் அதிகப்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.