தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பட்டாசு விற்பனை கோவையில் ஜோராக ஆரம்பித்துள்ளது. பெரியவர்களுக்கு தீபாவளி என்றால் குடும்பத்தினருடன், நண்பர்களுடன் கோயில், திரைப்படம் என்றால் சிறுவர்களுக்கு புத்தாடைகளும் பட்டாசும் தான் ஸ்பெஷல். 

அந்த வகையில் இம்முறை சிறுவர்கள் விரும்பும் வகையில் பட்டாசுகள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுபற்றி வியாபாரிகள் சிலரிடம் பேசுகையில், அவர்கள் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

"டான்சிங் பீகாக் வகை பட்டாசுகள் மயில் தொகை விரிப்பது போல ஒளி எழுப்பும். மணி பென்னி எனும் வகை பட்டாசு நமது மேலே பண மழை பொழிவது போல தோற்றத்தை கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது சிறுவர்களுக்கு பிடித்தமான பட்டாசுகளாக உள்ளது என பீளமேடு பகுதியில் செயல்படும் அம்மன் பட்டாசு கடையை சேர்ந்த திருமதி.ஜி.சாவித்திரி தெரிவித்தார். 'பிளேம் கண்' எனும் கைத்துப்பாக்கி போன்ற பட்டாசும் சிறுவர்களிடம் பிரபலம் என்றார். இவர் பீளமேடு பகுதியில் 35 ஆண்டுகளாக தீபாவளி அன்று பட்டாசு கடை அமைத்து நடத்திவருகிறார்.

இதே பகுதியில் 50 ஆண்டுகளாக நட்ராஜ் பட்டாசு கடையை சேர்ந்த திரு. மூர்த்தி கூறுகையில், கிட்டார் தோற்றம் கொண்ட புஷ் வானம் போன்ற பட்டாசுகள், வாட்டர் மெல்லன் வெடி, குலஃபீ மற்றும் சிலண்டர் பாம்ப் இந்த ஆண்டின் புதுவரவுகள். இவை சிறுவர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது என்றார். சிவகாசியிலும் பட்டாசு கடை வைத்துள்ளார் திரு.மூர்த்தி.

"வழக்கமான வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பட்டாசு வாங்க வருகை தருகின்றனர். இதனால் வியாபாரம் இந்த ஆண்டு நல்ல படியாக அமையும் என எதிர்பார்ப்பதாகவும், அதே சமயம் இணையவழி விற்பனை (ஆன்லைன்) சிறு தாக்கத்தை கடைகள் மேல் ஏற்படுத்தத்தான் செய்கிறது," என திருமதி.சாவித்திரி கூறினார். " ஆன்லைன் விற்பனை நடைபெறுவது நிச்சயமாக ஒரு சிறு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது," என்பதை திரு.மூர்த்தியும் ஒப்புக்கொண்டார்.

தீபாவளிக்கு இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும் என நம்புவதாக அவர்கள் கூறினர்.