நவம்பர் 1 முதல் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் இல்லாமல் நுழைய முடியாது!
- by admin
- Oct 29,2025
கோவை மாவட்டம், வால்பாறைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் (E-pass) பெற்று மட்டுமே நவம்பர் 1ஆம் தேதி முதல் பயணம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க. கிரியப்பனவர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வால்பாறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த இ-பாஸ் நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களுக்கு இ-பாஸ் பெறுவதற்கு https://www.tnepass.tn.gov.in/home என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இ-பாஸ் பதிவு செய்யாமல் வரும் சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி பாஸ் பெறும் வகையில்,ஆழியார் சோதனைச் சாவடி மற்றும் சோலையார் அணை இடதுகரை (மழுக்குப்பாறை வழி) சோதனைச் சாவடி ஆகிய இடங்களில் இ-பாஸ் பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சுற்றுலாப் பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரவும், பயன்படுத்தவும் கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இ-பாஸ் கண்காணிப்புப் பணியில் வருவாய்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை மற்றும் வனத்துறை சார்ந்த அதிகாரிகள் இணைந்து செயல்பட உள்ளனர்.
வால்பாறை தாலுகாவில் வசிக்கும் உள்ளூர் மக்களும் (இருசக்கர, நான்கு சக்கர மற்றும் சுற்றுலா வாகன உரிமையாளர்கள்) அதே இணையதளத்தில் ஒருமுறை மட்டும் “Localite Pass” பதிவு செய்து கொண்டால் போதுமானதாகும்.
“சுற்றுச்சூழலை காக்கவும், சுற்றுலா போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், அனைவரும் இ-பாஸ் விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்”.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




