50 வருடங்களுக்கு மேலாக  மதுக்கரை தாலுக்கா, குறிச்சி உப்பிலிதிட்டு பகுதியில் வசித்து வரும் நிலையில் தங்களுக்கு இதுவரை பட்டா வேண்டும் என பலமுறை மனு அளித்தும் பதில் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் 200 குடும்பங்களை சார்ந்த பிரதிநிதிகள் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மனுவை வழங்கி இருக்கின்றனர்.

இது குறித்து அவர்கள் மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம், மதுக்கரை தாலூக்கா, குறிச்சி, உப்பிலிதிட்டு பகுதியில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். 

எங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து ஆதார். மின் இணைப்பு, ரேசன் கார்டு, வீட்டு வரி, கேஸ் இணைப்பு என அனைத்தும் பல வருடங்களாக இங்கு குடியிருப்பதற்கு ஆதாரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயினும் நாங்கள் எங்கள் வீடுகளுக்கான பட்டாவானது இன்று வரை அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்படவில்லை. நாங்கள் வயதானவர்கள் குழந்தைகள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல முறை நேரில் முறையிட்டும் மனு அளித்தும் எந்தவித பலனும் இல்லாமல் போய் விட்டது.

ஆனால் எங்கள் பகுதியில் உள்ள க.ச.எண். 149க்கு பட்டா அளித்ததனை தாங்கள் கருத்தில் கொண்டு அதனை மேற்கோள்காட்டி மீதமுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தாங்கள் முன் வந்து பட்டா அளிக்குமாறு மிகப் பணிவுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மக்கள் சார்பில் தன்னார்வலர் ஒருவர் அவர்களுடன் வந்து இன்று மனுவை ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.