சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சாலைப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (AEC & RI), கோயம்புத்தூரில் “உயிர் காவலன்” சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வு, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) அலுவலகம், கோயம்புத்தூர் மாநகர காவல் துறை மற்றும் அரசு அல்லாத அமைப்பான உயிர் ஆகியவை இணைந்து நடாத்தும் “நான் உயிர் காவலன்” இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இவ்வியக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஜி. கிரியப்பாவணர், ஐ.ஏ.எஸ்., அவர்களின் தலைமையில், இன்று (16.10.2025)  500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிர் காவலன் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்று, சாலை விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க உறுதியெடுத்தனர்.

 நிகழ்வில் ஆர். தமிழ்வேந்தன் பதிவாளர் மற்றும் செயல் துணைவேந்தர், மற்றும் டாக்டர் அ. ரவிராஜ் டீன், AEC & RI, கோயம்புத்தூர், முன்னிலை வகித்தனர். மாணவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், இந்த இயக்கத்தின் இலக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10 இலட்சம் பேர் உறுதிமொழி எடுப்பதாகும், அதில் ஏற்கனவே சுமார் 6 இலட்சம் பேர் பங்கேற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

மேலும், கோயம்புத்தூரில் இளம் வயதினர் மற்றும் புதிய ஓட்டுநர்களால் பல சாலை விபத்துகள் நடைபெறுகின்றன எனக் குறிப்பிட்டு, மாணவர்கள் இவ்வியக்கத்தில் பெருமையுடன் இணைந்திருப்பது பாராட்டத்தக்கது என்றார். 

மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தங்களின் தினசரி வாழ்க்கையில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிதல், செல்போன் பயன்படுத்தாமல் வாகனம் ஓட்டுதல், சாலை விதிகளை பின்பற்றுதல் மற்றும் பிறரையும் பாதுகாப்பாக நடக்க ஊக்குவித்தல் ஆகியவற்றில் உறுதிமொழி எடுத்தனர்.