நேரு உள் விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள, மாநகராட்சி விளையாட்டுத் திடலில் ரூ.1.95 கோடி மதிப்பீட்டில் கைப்பந்து உள் விளையாட்டு மைதானம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணியினை கோவை கலெக்டர் பவன்குமார் ஐ.ஏ.எஸ். இன்று துவக்கி வைத்தார்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் , மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ். ஆகியோர் முன்னிலையில் இப்பணிகள் துவங்கின.

மாநகராட்சி விளையாட்டுத் திடலில் இருந்த இந்த மைதானம் திறந்த வெளியில் உள்ளதால் மழைக் காலங்களில் விளையாட்டு வீரர்கள் போதிய பயிற்சிகளில் ஈடுபடவும், விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கும் முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

இதை தடுத்து மழைக்காலங்களிலும் விளையாட்டு வீரர்கள் விளையாட்டுப் பயிற்சி மற்றும் போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெறும் வகையில் கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில் விளையாட்டுத்திடலில் ரூ.1.95 கோடி மதிப்பீட்டில் சுமார் 997.74 சதுர மீட்டர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் கைப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி இன்று துவங்கியுள்ளது.

இங்கு 2 கைப்பந்து மைதானங்கள், பார்வையாளர்கள் மாடம், மேற்கூரைகள், கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கைப்பந்து விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளது.