இசையை நேசிக்கும் எவருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் எனும் மாமனிதரை பிடிக்கும் என்று அடித்து சொல்லலாம்.

1966ல் துவங்கி 2020 வரை பின்னணி பாடகராக திகழ்ந்த அவர் இந்திய திரை உலகை தன் பாடல்களால் திரும்பி பார்க்க வைத்தார், நம் அனைவரையும் அவர் பாடிய பாடல்களை திரும்ப திரும்ப கேட்க வைத்தார்.

கருப்பு-வெள்ளை திரை ரசிகர்கள் முதல் 3-D திரைப்பட ரசிகர்களான இன்றைய தலைமுறையினர் வரை அனைவரும் இவரின் குரலுக்கு அடிமையே.

 

40,000க்கும் அதிகமான பாடல்களை பாடிய இவர் கடந்த 2020 செப்டம்பர் 25ல் பூவுலகை விட்டு பிரிந்தாலும் இசையால் ரசிகர்களுடன், இசை பிரியர்களுடன் இன்றும் இனைந்துள்ளார்.

 

அவருக்கு இசை அஞ்சலி செலுத்தும் வகையில், கோவையில் வளர்ந்து வரும் பாடகர்களுக்கு இசை பயிற்சி வழங்கும் 'ஸ்டுடியோ மியூசிக் & மோர்' இசை அமைப்பு ஒரு வாய்ப்பை இன்று ஏற்படுத்தியிருந்தது.

அதன் உறுப்பினர்கள் பல மொழிகளில் அவர் பாடிய பாடல்களை பாடி, அவரை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

ஸ்டுடியோ மியூசிக் & மோர்' இசை அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான மகேஷ், இந்த இசை அஞ்சலியில் பாடப்படும் ஒவ்வொரு பாடலுக்குப் பின் இருக்கக்கூடிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இசை அஞ்சலி செலுத்தியவர்களில் சிலர் எஸ்.பி.பி. உடன் நேரில் பேசியவர்கள், சிலர் அவர் முன் பாடியுள்ளனர்.

நிகழ்வில் 65 க்கும் அதிகமான பாடல்கள் பாடப்பட்டன. இதில் சிறப்பு என்னவென்றால், எஸ் பி. பி. யின் பிரபலமான பாடல்களையும், அவர் பாடி தற்போதய காலத்தில் சற்று மறக்க பட்ட பாடல்களையும் மீண்டும் அழகாக நினைவுக்கு கொண்டுவந்தனர். 

 

அஞ்சலி செலுத்திய சிலரின் வார்த்தைகள்: 

 

"எஸ்.பி.பி. அவர்களுடைய பாடல்கள் என்பது எனக்கு மிகவும் பிடித்தவை. நான் இதற்கு முன்பு பாடியது இல்லை ஆனால் இன்று இங்கு அவருக்கு மரியாதை செய்யவேண்டும் என்று பாட முன்வந்தேன்," என்றார் லாவண்யா. 

 

 "நான் ஒருமுறை எஸ்.பி.பி.யை விமான நிலையத்தில் சந்தித்தேன். அவர் வெளியூருக்கு செல்ல தாமதமாக வந்ததால் வி.ஐ.பி. நுழைவு வழியாக செல்ல காத்து அங்கு தனியாக நின்று கொண்டிருந்தார். நானும் அங்கிருந்தேன், அவரை நான் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தேன். அதை அறிந்த அவர், உடனே என்னை கை அசைத்து அவரிடம் வர சொன்னார் 'நீங்கள் என்னிடம் ஏதவது பேசவேண்டுமா?' என்று கேட்டார். நான் 'நீங்கள் எங்கேயோ அவசரமாக செல்ல நிற்கிறீர்கள், நான் உங்களை இடையூறு செய்யகூடாது என்று தான் தயங்கி நிற்கிறேன்' என்றேன். 'நான் எப்பவும் பிஸியாக தான் நிற்பேன். நீங்கள் சொல்லுங்கள்' என்று கூறி என்னிடம் சகஜமாக பேசினார். அவர் மிகவும் எளிமையான மனிதர் " என்றார் கட்டிட கலை நிபுணராக உள்ள ராஜரத்தினம்.

 

உஷா கூறுகையில் "நான் அவர் முன்னிலையில் ஒரு கச்சேரியில் பாடியிருக்கிறேன். அப்போது நான் பாடும் போது சிறு தவறு செய்திருந்தேன். நான் பாடி இறங்கிய பின்னர், அவர் அன்பான கோபத்துடன் என்னை மிரட்டி, எனக்கு அறிவுரை வழங்கினார். அவரிடம் அன்று கற்ற சிறு பாடம் எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது," என்றார்.