கோவைபுதூர் பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (54). இவர் 1997 முதல் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கோவையில் பயங்கரவாத தடுப்பு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

13.3.2025 நள்ளிரவு 1.50 மணியளவில் இவர் வ.உ.சி மைதானத்தில் ஒரு புடவையைக் கொண்டு அங்கு இருந்த மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. ரேஸ் கோர்ஸ் காவல் நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து அவரின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன ஆனது?

வழக்கம் போல புதன்கிழமை காலையில் சொக்கலிங்கம் பணிக்கு சென்றுவிட்டு காரமடையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் ஒரு கிரஹப்ரவேச நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்த அவர் திடீரென ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரின் மனைவி கதவை தட்டி எதுவும் தவறான முடிவை எடுக்கவேண்டாம் என கெஞ்சிக்கொண்ட பின்னர் அவர் கதவை திறந்து வெளியே வந்தார். 

தான் வெளியே சென்றுவிட்டு பின்னர் வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்ற அவர் பின்னர் வ.உ.சி மைதானத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவர் அவருடைய மனைவியின் புடவையை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பணியிலிருந்த போது அவருக்கு எந்த அழுத்தமும் இருந்ததில்லை எனவும், அவர் தனது பணியை துடிப்புடன் செய்து வந்தார் எனவும் தகவல்கள் வந்துள்ளன. அவருடைய 2 மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். எந்த அழுத்தமும் இல்லாத அவர் ஏன் இந்த விபரீத முடிவு எடுத்தார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.