பெண்ணின் வயிற்றில் இருந்த 7.5 கிலோ கட்டியை அகற்றி கோவை ராயல் கேர் மருத்துவர்கள் சாதனை!
- by admin
- Oct 30,2025
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் கடந்த ஆறு மாதங்களாக தீராத வயிற்று வலி மற்றும் வயிறு அழற்சி காரணமாக அவதிப்பட்டு, பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அடையவில்லை. பின்னர், அவர் நோய் தீர்விற்காக கோயம்புத்தூரில் உள்ள ராயல் கேர் மருத்துவமனைக்கு வந்தார்.
மருத்துவர்கள் அவரை முழுமையாக பரிசோதித்து, தேவையான பரிசோதனைகள் மேற்கொண்டனர். அனைத்து புற்றுநோய் குறியீடுகள் (Tumour Markers) இயல்பாக இருந்தன. தொடர்ந்து எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் பரிசோதனையில், வயிற்றுப் சுமார் 28 x 26 x 17 செ.மீ அளவுடைய மிகப்பெரிய 7.5 கிலோ கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த மிகப்பெரிய கட்டியை அகற்றுவதற்காக சிறப்பு மருத்துவர்கள் — டாக்டர் மணிகண்டன் (புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணர்), டாக்டர் வினோதா (மகளிர் மற்றும் மகப்பேறு நிபுணர்), டாக்டர் முத்துகுமார் (மயக்கவியல் நிபுணர்), டாக்டர் அன்னபூரணி (பெதாலஜி நிபுணர்) ஆகியோர் குழுவாக இணைந்து அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனர்.
அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது; எந்தவித தொந்தரவும் இன்றி கட்டி முழுமையாக அகற்றப்பட்டது. கட்டி புற்றுநோய் தன்மை கொண்டதா என்பதை உறுதிப்படுத்த, ஆய்வக பரிசோதனை செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சையின் போது மேற்கொள்ளப்பட்ட ஃப்ரோஸன் செக்ஷன் (Frozen Section) பரிசோதனையில், அது கருப்பை புற்றுநோய் அல்லாத கட்டி (Uterine Leiomyoma) என உறுதி செய்யப்பட்டது.
வெற்றிகரமான அறுவைச் சிகிச்சைக்கு பிறகு நோயாளி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் பெற்று நலமுடன் வீடு திரும்பினார்.
இது குறித்து ராயல் கேர் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் க. மாதேஸ்வரன் தெரிவித்ததாவது:- 
“பெண்களில் வயிற்று வலி, வயிறு வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை உடனடியாக கவனிக்க வேண்டும். குறிப்பாக, 40 வயதுக்கு மேல் மாதவிடாய் நிற்கும் காலத்தில் சினைப்பை அல்லது கருப்பை கட்டிகள் உருவாகக்கூடும்."
"இத்தகைய அறிகுறிகள் தென்பட்டவுடன், உரிய மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெண்கள் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கும்போது, இத்தகைய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற முடியும்,” என்றார்.




