கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவ வார்டு அருகில், காத்திருப்போர் அறை ஒன்றை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து  கட்டிக்கொடுத்துள்ளார்.

ரூ.22.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த காத்திருப்போர் அறையை இன்று அவர் திறந்து வைத்து, பொது மக்களுக்காக அர்ப்பணித்தார்.

இதற்கடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வானதி பேசுகையில், 1 ஆண்டுக்கு முன்னதாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டு, பிரசவ வார்டு ஆகியவற்றை காணவந்திருந்த போது, கர்பமாக உள்ள பெண்களை அதற்கான சிகிச்சை பிரிவில் அனுமதித்து விட்டு, அவர்களின் குடும்பத்தினர் அருகே அமர்ந்து இருக்க வசதிகள் இல்லாத சூழல் இருந்ததை கண்டதாக கூறினார்.

எனவே இங்கு தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து காத்திருப்போர் அறை ஒன்றை கட்டிக்கொடுக்க வானதி விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு கோவை அரசு மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நிர்மலா ஒப்புதல் கொடுத்ததை அடுத்து, சுற்றுச்சுவர் வசதி, குடிநீர், கழிவறை வசதிகளுடன் இந்த காத்திருப்பு அறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கோவை அரசு மருத்துவமனையில் இடநெருக்கடி உள்ளதால், மருத்துவர்களின் வாகனங்களை நிறுத்தக்கூட இடமில்லாத சூழல் உள்ளதால், இதுகுறித்து தான் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இங்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க நடவடிக்கைகள் எடுக்க அரசு உத்தேசித்துள்ளதாக தெரிவித்ததாக கூறினார்.

"இங்கு இருக்கக்கூடிய நிறைய கட்டிடங்கள் மிக பழமையான கட்டிடங்களாக உள்ளன. இவற்றை அகற்றிவிட்டு, அடித்தளத்தில் வாகன நிறுத்த வசதியுடன், பல மாடி கட்டிடங்களை அமைத்தால், இன்னும் கூட கோவை அரசு மருத்துவமனைக்கு அதிகமான நோயாளிகள் வரமுடியும். இதற்கான ஒரு கோரிக்கையை மாநில சுகாதார துறை அமைச்சரிடமும், மத்திய சுகாதார துறை அமைச்சரிடமும் கொடுக்க உள்ளேன். இந்த திட்டத்தை எப்படி அமைக்கலாம் என்கிற விவரங்களை பொதுப்பணி துறை அதிகாரிகள் எனக்கு வழங்க தயாராக உள்ளனர்," என கூறினார்.