கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி அணை மற்றும் பில்லூர் அணை.
சிறுவாணி மூலம் 32 வார்டுகளுக்கும், பில்லூர் அணை மூலம் 68 வார்டுகளுக்கும் குடிநீர் எடுக்கப்படுகிறது. பருவமழை சென்ற ஆண்டு பெரிதளவு பொழியாததாலும் தொடர்ந்து இந்த 2 அணைகளில் இருந்து நீர் எடுத்துவருவதாலும், நீர் அளவு இந்த 2 அணைகளில் குறைந்து வருகிறது.
சிறுவணியில் 18 அடிக்கும் குறைவாகவும், பில்லூர் அணையில் 62 அடிக்கு குறைவாகவும் நீர் உள்ளது. இதனால் இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே கோவை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஆங்காங்கே தலை காட்டி வருகிறது.
2024 பிப்ரவரி 21 ஆம் தேதி 87 வார்டு குனியமுத்தூர் பகுதியில் மக்கள் சாலை மறியல் செய்தனர். 20 நாட்களாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டாடி தங்கள் மறியல் போராட்டத்தின்போது அவர்கள் முன்வைத்தனர்.
மார்ச் 21 ஆம் தேதி வார்டு என் 28, ஆவரம்பாளையம் பகுதியில் குடிநீர் வந்து 20 நாட்களாவதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல் இந்த மாதம் (ஏப்ரல் 2024) 1 ஆம் தேதி கவுண்டம்பாளையம் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் தண்ணீர் விநியோகம் கடந்த 7 நாட்களாக செய்யப்படவில்லை என கூறி மேட்டுப்பாளையம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்துள்ளனர்.
சிறுவாணி அணையில் உள்ள நீரை வைத்து ஜூலை 8, 2024 வரை சமாளிக்கலாம் என தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் தற்போது கூறினாலும், சிறுவாணி நீரை நம்பியுள்ள கோவை மாநகராட்சி வார்டு எண்ணிக்கை குறைவானவை தான்.
பில்லூர் 3 ஆம் குடிநீர் திட்டம் மூலம் கோவை மக்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி கோவையில் பிப்ரவரி 2024ல் கூறினார். ஆனால் தற்போது சூழல் வேறுபட்டு உள்ளது. கடந்த 3 மாதங்களில் கோவை மாநகரின் பல இடங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது.
வறட்சி காலத்திற்கு கோவையை தயார்படுத்தாமல் மாநில அரசு அலட்சியமாக இருந்துள்ளது. இது தான் கோவை மக்கள் பாதிப்புக்கு ஒரு பெரும் காரணமாக இருப்பதாக பா.ஜ.க. வின் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாமலை அண்மையில் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
உடனடியாக மாநில அரசு நிலைமையை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் எனவும், மேலும் இதை கவனிக்காமல் விட்டால் ஏப்ரல் மே மாதங்களில் நிலைமை மேலும் மோசமாக வாய்ப்புள்ளதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி கோவை மாநகராட்சியின் கீழ் உள்ள மற்றும் ஒரு இடத்தில குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல் செய்துள்ளதால், இதை அரசு உற்றுநோக்கி தீர்வு காண வேண்டும்.
கோவையில் பிரச்சாரம் செய்ய இம்மாதம் 13ம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கோவை வருகிறார். அப்போது சிறுவாணி மற்றும் பில்லூர் அணை குறித்து தி.மு.க.வின் கோவை தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முதலமைச்சரிடம் இதுபற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.