திருப்பூர் ரிதன்யா வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரி தந்தை கோவையிலுள்ள ஐ.ஜி. அலுவலகத்தில் மனு
- by CC Web Desk
- Jul 12,2025
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சனை கொடுமையால் உயிரை மாய்த்துகொண்ட புது மணப்பெண் ரிதன்யாவின் மரணம் தமிழகத்தில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இது தொடர்பான வழக்கில் விசாரணை தொய்வாக இருப்பதாகவும், உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியாகி வருவதாகவும் அவரின் தந்தை அண்ணாதுரை வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இதை விசாரிக்கும் விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் உள்ள மேற்கு மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் இன்று அவர் நேரில் மனு கொடுத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, இந்த வழக்கில் சரியான வழக்கு பதிவு செய்து, அதை தீவிரமாக விசாரிக்க வேண்டும் எனவும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் தான் மனுவில் கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கு விசாரணை தாமதமாக செல்வதால் இவ்வழக்கின் விசாரணை அதிகாரி மீது சந்தேகம் உள்ளது எனவும், இந்த வழக்கை தனி விசாரணை அதிகாரி விசாரிக்கவேண்டும் எனவும் மத்திய அரசின் கீழ் உள்ள சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் மனுவில் கூறியுள்ளதாக அவர் கூறினார்.