விவசாயிகளுக்கு சமகால சந்தை, தொழில்வாய்ப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உள்ளிட்ட பலவற்றை எடுத்துரைக்கும் வகையில் கோவையில் இயங்கும் இந்திய வர்த்தக சபை (ICCI) சார்பில் 'உழவே தலை' எனும் விவசாய கருத்தரங்கின் 7வது பதிப்பு நாளை (13.7.25) கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது.

வேளாண் மக்களின் நிகர லாபத்தை அதிகரிக்கவேண்டும் என்ற இலக்குடன் இந்த கருத்தரங்கு தொடர்ச்சியாக (கொரோனா காலத்தில் மட்டும்  முறை நிறுத்தப்பட்டு) நடக்கிறது.

இந்த கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் மணிசுந்தர் இது பற்றி கூறுகையில் :-

வேளாண் மக்களுக்கு பயனுள்ள தலைப்புகளைப் பற்றி  விவாதித்து, உருவாக்கி அதற்கான நிபுணர்களை அழைத்து இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

வரும் ஞாயிறு அன்று காலை அமர்வு மற்றும் மதியம் அமர்வு என இரண்டு அமர்வுகள் இந்த கருத்தரங்கில் இடம்பெறும். காலையில் குறைந்த மண்வளம், அதிக நீர் தேவை இல்லாத மரப் பயிர்களை தோப்பாக வளர்க்கும் வாய்ப்பு பற்றி சிறப்புரைகள் மற்றும் விவாதங்கள் நடைபெறும்.

இந்த தலைப்பில், வேம்பு, புளி மற்றும் கொடுக்காப்புளி போன்றவை பற்றி நிபுணர்கள் பேசுவார்கள்.  இந்த மூன்று மர பயிர்களுக்கு சந்தை வாய்ப்புகள் சிறப்பாக இருப்பதால் இவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மதிய உணவு இடைவேளைக்கு பின்பு நடைபெறும் அமர்வில் கரவை மாடு வளர்ப்பு பற்றி சிறப்புரை மற்றும் விவாதங்கள் நடைபெறும். இதில் பண்ணையை திட்டமிடுதல்/ வடிவமைத்தல்,  கரவை மாடுகளின் ஊட்டச்சத்து மேலாண்மை,  இனப்பெருக்க மேலாண்மை குறித்து பேசப்படும்.

இந்த இரண்டு அமர்வுகளும் விவசாய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இதற்கு முன்பு நடைபெற்ற கருத்தரங்குகளில் விவசாயிகள் நல்ல அளவில் கலந்துகொண்டுள்ளனர். அதேபோல இம்முறை நடைபெறும் இக்கருத்தரங்கில் விவசாயிகள் அதிகப்படியாக கலந்துகொண்டு பயனடையவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.