கோவை மாவட்டம் ஜடையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனைக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தீர்வளிக்க வேண்டுமென வலியுறுத்தி ஆலங்கொம்பு சந்திப்பு பகுதியில் 2 ஆம் நாளாக சாலை மறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். 

வழக்கமாக 1 நாள் விட்டு 1 நாள் குடிநீர் வழங்கப்பட்டுவந்த நிலையில் சிலநாட்களாக ஜடையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதியில் 10 நாட்களுக்கு 1 முறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 

பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கல் இடைவெளி அதிகரித்துள்ளது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு அங்கு ஏற்பட்டுள்ளது. 

இதுபற்றி ஊராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி அந்த பகுதி மக்கள் நேற்று மாலை 6 மணிக்கு ஆலங்கொம்பு சந்திப்பு பகுதியில் குடத்துடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். 

இதனால் போக்குவரத்து அப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என போராடிய அவர்கள் நாளிரவு 1 மணிக்கு கலைந்துசென்று மீண்டும் இன்று  சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர். 

மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் AK செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் பழனிசாமி  பேச்சுவார்த்தைக்கு வந்தம் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. 

இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.