இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப ( ஐ.டி.) துறைக்கு மிகப்பெரும் பங்களிப்பை தொடர்ந்து தந்து வரும் மாநிலங்களில் தமிழகம் முக்கியமான இடத்தில் உள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் மேலும் சிறப்பான ஒரு மையமாக விளங்க வேண்டும் என்பதற்காக 2023ன் துவக்கத்தில் தமிழகத்தின் 3 இடங்களில் (சென்னை, கோவை மற்றும்  ஓசூர்) அதிநவீன தொழில்நுட்ப நகரங்கள் திட்டம் (Tamil Nadu Tech City) அறிவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள IT காரிடோர் பகுதியில் 150 ஏக்கர் நிலப்பரப்பிலும், ஓசூரில் 500 ஏக்கர் நிலப்பரப்பிலும் தொழில்நுட்ப நகரங்கள் அமையவுள்ளதாக கடந்த ஆண்டு அரசு தரப்பில் கூறப்பட்டது.

கோவையின் தொழில்நுட்ப நகரம் அமைக்க நிலம் கண்டறியப்பட்டு வந்த நிலையில் சென்ற ஆண்டு இந்த திட்டத்திற்கு கோவை சரவணம்பட்டியை அடுத்த சத்தி சாலையில் பல ஏக்கர் நிலப்பரப்பு தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

சென்ற ஆண்டு  செப்டம்பர் மாதம் கோவை வந்த தகவல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கோவை ஐ.டி. துறையில் சிறப்பான வளர்ச்சியை வெளிப்படுத்திவருவதாகவும் கோவையில் இந்த அதிநவீன தொழில்நுட்ப நகர திட்டத்திற்கான நிலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த அதிநவீன தொழில்நுட்ப நகரங்கள்  திட்டத்தை செயல்படுத்திட செயல் திட்ட அறிக்கை விரைவில் தயார் செய்யப்பட்டு  அரசு அதை வெளி கொண்டு வரும் என தெரிவித்தார்.

இதற்கு நடுவே சரவணம்பட்டி அருகே வரும் என்று எதிர்பார்க்கபட்ட இந்த திட்டம் தற்போது சோமையம்பாளையம் கிராம பகுதியில், அரசு- தனியார் கூட்டாக அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த தொழில்நுட்ப நகரம் சுமார் 321 ஏக்கர் நிலப்பரப்பில் சோமையம்பாளையம் கிராம பகுதியில் அமைய உள்ளது.

இதில் ஐ.டி நிறுவனங்களுக்கு தேவையான ஆய்வு-ஆராய்ச்சி கூடம், ஐடி துறை சார்ந்த தொழில்நுட்பங்களை உருவாக்க தேவையான தொழில்நுட்ப வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள், தங்கும் இடங்கள், வணிகத்திற்கான இடங்கள், முதல் ரக அலுவலகத்திற்கான இடங்கள், பொழுதுபோக்குக்கான அம்சங்கள் மற்றும் வளாகங்கள், உணவகங்கள், பல திரைகள் கொண்ட திரைப்பட வளாகங்கள், ஷாப்பிங் மால்கள், தடை இல்ல மின்சாரம், சீரான குடிநீர் விநியோகம், பூங்காக்கள், மிக வேகமான இன்டெர்ன்ட் வசதி (OPTICAL FIBER CABLE INFRA)  போன்ற பல வசதிகள் உள்ளடங்கும்.

கோவையின் ஐ.டி. துறை வளர்ச்சிக்கு இது மேலும் உதவிடும் என்று கருதப்படுகிறது. ஆனால் இதற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் வனப்பகுதிக்கும், யானைகள் வழக்கமாக பயன்படுத்தும் இடத்திற்கும் அருகில் உள்ளதால் இந்த இடத்தில இந்த திட்டம் அமைவதற்கு பதில் வேறு இடத்தில் அமைவது சரியானதாக இருக்கும் என்ற கருத்து எழுந்து வருகிறது.

இந்த திட்டம் அமையவுள்ள இடத்தில் தமிழக அரசின் எல்காட் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் தள மதிப்பீடு செய்தது. தற்போது, தொழில்நுட்ப நகரத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்க, ரியல் எஸ்டேட் துறையில் உள்ள பெரும் கன்சல்டண்சி நிறுவனங்களான சி.பி. ஆர்.ஈ. (CBRE South Asia Pvt Ltd), ஏர்னஸ்ட்  அண்டு யங் (Ernst & Young LLP) மற்றும் நயிட் பிராங்க் இந்தியா ( Knight Frank India) விருப்பம் தெரிவித்து உள்ளன.

இவர்களில் தேர்வாகும் நிறுவனம் விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, அதை சமர்ப்பித்த பின்னர், அந்த திட்ட அறிக்கை இறுதி செய்யப்படும் பட்சத்தில் இந்த தொழில்நுட்ப நகரத்தின் கட்டுமான பணிகள் துவங்கும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராகி, ஒப்புதல் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


படம் : விளக்கத்திற்காக மட்டும் - Pic is Representational