உழவர் சந்தைக்கு அதிகாலையிலேயே உழவர்கள் காய்கறி மூட்டையோடும், கீரைக் கட்டோடும் வந்து விடுகிறார்கள். மதியம் வரை அவர்கள் தங்கள் காய்கறிகளையும், பழங்களையும் விற்பனை செய்து களைத்துப் போகிறார்கள். 


அவர்கள் தங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ளும் வகையிலும்,பசியை போக்கிக்கொள்ளும் வகையிலும் தமிழ்நாட்டுக்கே உரிய தொன்மை மிக்க ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியக் கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகள் போன்ற உணவுகளை வழங்கவும் அங்கு வருகிற நுகர்வோர்கள் அவற்றை அருந்தி, விழிப்புணர்வு பெறவும், முதல் கட்டமாக 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்பட உள்ளது. 


சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகள் போன்ற உணவுகளை வழங்கி நுகர்வோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



முதற்கட்டமாக கோவை, திண்டுக்கல் , ஈரோடு, குமரி, கள்ளக்குறிச்சி , கிருஷ்ணகிரியில் உணவகம் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது.மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை , ராமநாதபுரம்,சேலம், தேனி, திருப்பூர், திருச்சி, வேலூர் நெல்லையிலும் தொன்மை சார் உணவகம் அமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது.



உழவர் சந்தையில் அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே தொன்மைசார் இந்த உணவகங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


PHOTO: THE HINDU