முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அவிநாசி - மேட்டுப்பாளையம் வழியே உள்ள 38 கிலோமீட்டர் சாலையை 4 வழி நெடுஞ்சாலையாக தரமுயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

தினமும் 22,000 வாகனங்கள் இந்த சாலையில் செல்கிறது. சிறப்பு நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. மேலும் இந்த சாலையின் அகலம் என்பது 23 அடியாக உள்ளதால் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்த முயலும்போது விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

எனவே இந்த 38 கிலோமீட்டர் சாலையை 4 வழி சாலையாக மாற்ற அரசு முடிவு செய்து நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதில் 13 கிலோமீட்டர் திருப்பூர் மாவட்டத்திலும், 25 கிலோமீட்டர் கோவை மாவட்டத்திலும் உள்ளது. இதற்காக தமிழக அரசு ஏற்கனவே ரூ. 238 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பணிகள் இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவிநாசி - அன்னூர் வழியே வரக்கூடிய பகுதிகளில் 400க்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. கோவை மேட்டுப்பாளையம் - அன்னூர் வரை 1600 மரங்கள் இந்த சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருக்கும் எனவும் இதில் 1342 மரங்கள் அகற்ற திட்டமிட்டும், மீதம் உள்ள 262 மரங்களை வேறு இடத்தில் மறு  நடவு செய்யவும் முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் இத்திட்டத்திற்காக மரங்கள் வெட்டியது தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. அண்மை தகவல்கள் படி இந்த சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கை தர தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. மரங்களை வெட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட குழுவின் அனுமதி பெற்றதா என கேள்வியும் ஆணையம் எழுப்பியுள்ளது.