கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் நிதி அளிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முதன்மை  செயலாளர் துரை வைகோ பங்கேற்றார்.

நிகழ்ச்சியின் இடையே  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துரை வைகோ, திமுக, மதிமுக கூட்டணி என்பது தேர்தலில் சீட்டுகளுக்காக உருவான கூட்டணி கிடையாது, மதவாதசக்திகளை அகற்ற வேண்டும் என்பதற்காகவே உருவான கூட்டணி என்றார்.

2024 தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் என தெரிவித்த அவர்,கடந்த முறை ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதி உறுப்பினர்கள் பெற்றதாகவும், இந்த முறை கூடுதலாக ஒரு மக்களவை தொகுதி வேண்டும் என  திமுக தலைமையிடம் கேட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். தாங்கள் கேட்ட சீட் வழங்கப்படவில்லை என்றாலும் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியே வராது என உறுதியாக கூறினார்.

திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் திராவிட இயக்க கொள்கைகளால் தான் படிப்பறிவு,கல்வி அறிவு, வேலைவாய்ப்பு உள்ளிட்டு பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்கி கொண்டிருக்கிறது எனவும் வடமாநிலத்தில் இருந்து வேலைக்காக  இங்கே வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

பா.ஜ.க. சொல்வதை போல திராவிட இயக்க கொள்கைகளால் தமிழ்நாடு பாலாகி போனது என்றால், வட மாநிலத்திலிருந்து ஏன் இங்கே பிழைப்பு தேடி வருகின்றனர்? என கேள்வி எழுப்பினார்.