குளோபல் பாத்வேஸ் பள்ளியில் ரூ.13 கோடி மதிப்பில் 'ஃப்ளின் விளையாட்டு அரங்கம்' திறப்பு
- by admin
- Jul 22,2025
கோவை செட்டிபாளையம் பகுதியில் இயங்கும் குளோபல் பாத்வேஸ் பள்ளியில் 'ஃப்ளின் அறக்கட்டளை' சார்பில் ரூ.13 கோடி நிதியில் 2 ஏக்கர் நிலத்தில் 28,000 சதுரடியில் கட்டப்பட்ட நவீன 'ஃப்ளின் விளையாட்டு அரங்கம்' திங்கள் அன்று திறக்கப்பட்டது.
இந்த அரங்கை நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய கூடைப்பந்து மகளிர் அணியின் முன்னாள் தலைவர் அனிதா பால்துறை, கௌரவ விருந்தினரான கலந்துகொண்ட 5 முறை தேசிய கூடைப்பந்து சாம்பியன் பட்டம் வென்ற சுகவனேஷ்வர்; ஃப்ளின் அறக்கட்டளை பிரதிநிதி டிம் ஏக்கின்; குளோபல் பாத்வேஸ் பள்ளி நிர்வாக அறங்காவலர் கமலா சாகா; பள்ளி முதல்வர் லதா, பள்ளியின் ஆலோசகர் மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் மற்றும் பலர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
இந்த நவீன விளையாட்டு அரங்கத்தில், உலக தரம் கொண்ட கூடைப்பந்து உள் அரங்கம்; ஓடுதளம், ஜிம்னாசியம், டேபிள் டென்னிஸ் விளையாட்டு அமைப்பு, சதுரங்கம் (செஸ்) விளையாட்டு பகுதி; உடை மாற்றும் அறை, சிற்றுண்டி வளாகம், முதலுதவி அறை ஆகியவை உள்ளன.
சாதாரண குடும்பங்களை சேர்ந்த, முதல் தலைமுறை கல்வி கற்கும் குழந்தைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்குடன், குளோபல் பாத்வேஸ் பள்ளி 2009ல் வில்லேஜ் கம்மியுணிட்டி பவுண்டேஷன் எனும் அமைப்பு மூலம் கனடா நாட்டை சேர்ந்த தெரசா மெர்ஸ்கீ என்பவரால் நிறுவப்பட்டது. இதற்கு அந்நாடு கல்வியாளர்கள் பார்பரா ஜெய்பாட்ஸ் மாற்றம் பார்பரா கல் பிரேய்த் ஆதரவளித்துள்ளனர்.
இந்த பள்ளியின் நோக்கம் பற்றியறிந்த ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞரும், கல்வி, சமூக முன்னேற்றத்திற்கு நிதியை திரளாக கொடுக்கும் குணம் படைத்த டாக்டர் வின்சென்ட் ஜான் ஆடம்ஸ் ஃப்ளின் என்பவர், இந்த பள்ளிக்கு பெருமளவில் நிதியுதவி செய்துள்ளார்.
அவர் தனது அறக்கட்டளை மூலம் இப்பள்ளியில் சிறந்த விளையாட்டு அரங்க வளாகம் உருவாக தேவையான நிதியை வழங்க விருப்பம் தெரிவித்திருந்தார். அவர் மறைந்த பின்னரும், அவரின் அறக்கட்டளை ரூ. 13 கோடி நிதியை இப்பள்ளிக்கு அவர் விருப்பம் போல வழங்கியது. எனவே இந்த வளாகத்துக்கு அவரின் நினைவாக ஃப்ளின் விளையாட்டு அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர் அனிதா பால்துறை பேசுகையில், கல்விக்கும் விளையாட்டுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்கும் பள்ளிக்கூடத்தில் இப்படிப்பட்ட ஒரு விளையாட்டு அரங்கத்தை துவக்கி வைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றார். நிச்சயமாக இந்த விளையாட்டு வளாகத்தில் திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாகி இப்பளிக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தனது வாழ்க்கையைப் பற்றி பள்ளியின் மாணவ மாணவிகளிடம் பகிர்ந்து கொண்ட போது அவர் 8 ஆண்டுகளாக இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் கேப்டனாக தான் இருந்ததையும், அந்த இடத்தை அடைய வாழ்க்கையில் நிறைய சவால்களை கடந்து தான் அந்த அங்கீகாரத்தை பெற்றதாக கூறினார். இதற்கு தனது தந்தை வழங்கிய சுதந்திரத்தையும், நம்பிக்கையையும் முக்கிய காரணங்களாக அவர் குறிப்பிட்டார்.
விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற தன்னுடைய கனவில் ஒரு முறை அல்ல மூன்று முறை மிகப்பெரும் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று கூறிய அவர், ஒவ்வொரு முறையும் தனது தந்தை கொடுத்த ஊக்கத்தினால் அந்த காயத்திலிருந்து மீண்டு வந்து மறுபடியும் இந்தத் துறையில் வெற்றியை அடைந்ததாக குறிப்பிட்டார்.
ஸ்போர்ட்ஸ் என்பது நமக்கு எதிரே வரக்கூடிய சவால்களை எப்படி எதிர்கொள்வது, சரியான முடிவுகளை எப்படி எடுப்பது, ஒரு முறை கீழே விழுந்தால் துணிவுடன் எப்படி மீண்டு எழுவது, நேரத்தை எப்படி பயனுள்ளதாக பயன்படுத்துவது என்பதை உணர்த்தும் எனக் கூறிய அவர் ஸ்போர்ட்ஸ் துறையில் ஈடுபடும் மாணவர்கள் கடின உழைப்பு, கூட்டு முயற்சி, ஒழுக்கம் இவை மூன்றினுடைய மதிப்பு என்ன என்பதை சிறுவயதில் இருந்து கற்றுக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை வழங்கும் என்று கூறினார்.
ஸ்போர்ட்ஸ் என்பது பெண்களுக்கு உகந்ததல்ல என்று பேசப்பட்ட காலத்தில்/ சமுதாயத்தில் இருந்து வந்த தான், ஒரு பெண் என்பவள் குடும்பத்தையும் தனது கனவையும் சமமாக பார்த்துக் கொள்ள முடியும் என்பதை நிரூபித்ததற்கு தன் குடும்பம் கொடுத்த ஆதரவு, நம்பிக்கை, ஊக்கம் ஆகியவை முக்கிய காரணம் என்றார்.
அவரைத் தொடர்ந்து கௌரவ விருந்தினர் சுகவனேஷ்வர் பேசுகையில், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் கூடைக்குள் லாபகமாக பந்தை போடுவதைப் பற்றி மட்டும் கற்றுக்கொண்டு பிறவற்றை ஒதுக்கித் தள்ள முடியாது. அனைத்தையும் முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், அதேபோலத்தான் கல்வியும்; கல்வியில் அனைத்தையும் முழுமையாகவும், அது என்னவென்றும் புரிந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு பக்குவத்தை ஸ்போர்ட்ஸ் கற்றுக் கொடுக்கும். ஸ்போர்ட்ஸ் என்பது அதையும் தாண்டி தோல்வியை எதிர்கொள்ளும் சக்தியை ஒரு விளையாட்டு வீரருக்கு கொடுக்கும் என்றார். இந்தப் பள்ளியில் விளையாட்டு பயிற்சி எடுத்த ஒரு மாணவர்/ஒரு மாணவி வருங்காலத்தில் இந்தியாவிற்காக ஒலிம்பிக் அளவிற்கு செல்ல வேண்டுமென்று விரும்புவதாக அவர் கூறினார்.
இந்நிகழ்விற்கு பின்னர் புதிதாக கட்டப்பட்ட பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் திறந்து வைக்கப்பட்டது. மாணவர்கள் பெரும் திரளாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வளாகத்தை கண்டு ரசித்தனர்.