தங்க நகை வாங்குவது தானே எல்லோருக்கும் பிடிக்கும்? இளைஞர்கள், குறிப்பாக இளம்பெண்கள் 'லைட் வெய்ட்' என்று சொல்லும் மிக மிக குறைவான எடை கொண்ட தங்க நகைகளை வாங்க தான் வழக்கமாக ஆர்வம் காட்டுவார்கள் என கேள்வி படுவோம்.

ஆனால் தற்போது தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. 1 கிராம் 22 காரட் தங்கம் இன்று (16.10.25) ரூ.11,900 ஆக உள்ளது. 1 பவுன் ரூ.95,200. தங்கம் இப்படி உயர்ந்து வரும் சூழலில் சமீப நாட்களாக வெள்ளி நகைகளை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்வதை காண முடிகிறது என நகை துறை சேர்ந்த சிலர் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி கோவை என்.ஜி.ஜி.ஓ. காலனியில் இயங்கும் ஷிவானி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் முத்துவடிவேலு-விடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

என்னை பொறுத்தவரை தங்கம் விலை இப்படி உயர்ந்துள்ளதால் தீபாவளி அன்று விற்பனை சிறப்பாக இருக்கும் என கூறமுடியாது. அதே சமயம் வெள்ளி நகைகளை நாடி வரும் வாடிக்கையாளர்கள் சமீப நாட்களில் அதிகரித்துள்ளனர். இளம்பெண்கள் மத்தியில் ஸ்டைலான வெள்ளி நகைகளுக்கு வரவேற்புள்ளது.

அதற்கேற்ப நாங்களும் 1 முதல் 2 கிராமுக்குள் அவர்கள் விரும்பும் படி வெள்ளி செயின்களை உருவாக்கி வழங்கிவருகிறோம். இத்துடன் அவர்களுக்கு பிடித்த வடிவத்தில் பெண்டண்ட் அமைத்து வழங்குகிறோம். இதற்கு வரவேற்பு உள்ளது. வெள்ளி தான் அடுத்த தங்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தங்கம் தங்கம் தான்

திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தங்கம் என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்போது 22 காரட் தங்கம் 1 பவுன் ரூ.90,000 - 95,000 என்ற அளவில் உள்ளது. 22காரட் வாங்க இயலாத நேரத்தில் இதை விட குறைவான காரட் தங்க வகைகளை நோக்கி வாடிக்கையாளர்கள் செல்ல வாய்ப்பு உள்ளது என வெள்ளலூரை சேர்ந்த ராஜன் தெரிவித்தார்.

"தங்க நகை என்பது வெறும் அழகிற்கு அணிவது அல்ல, அது நடுத்தர மக்களுக்கு ஒரு சிறந்த முதலீடு. இன்று 18 காரட் தங்கம் 1 கிராம் ரூ.9,830 என்ற சூழல் உள்ளது. இதை வாங்க இயலாதோர் 9 காரட் தங்கத்தின் மீது ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது மக்களிடையே காலம் காலமாக உள்ள வழக்கம். எனவே தங்கத்துக்கு மவுசு குறையாது. ட்ரெண்டிங்கிலும் தங்க நகைகள் தான் இருக்கும்," என வாடிக்கையாளர் பார்வையாக ராஜன் கருத்து தெரிவித்தார்.