கோவையை கொண்டாடும் பிரம்மாண்ட விழாவான 'கோயம்புத்தூர் விழா 2024' இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது.

 

இதை அடுத்து இன்று இந்த மாபெரும் விழாவின் ஒரு பகுதியாக 2 டபுள் டக்கர் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

கோவை மக்கள் நாளை முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை இந்த டபுள் டக்கர் பஸ்களில் முன்பதிவு செய்துவிட்டு ஒய்யாரமாக அமர்ந்து பயணம் செய்தபடியே கோவையின் அழகை உயரத்தில் இருந்து பார்த்து ரசிக்க முடியும்.

 

இந்த சேவையை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் கராந்தி குமார் பாடி, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மற்றும் கோயம்புத்தூர் விழா குழுவினர் துவக்கி வைத்தனர்.

இந்த டபுள் டக்கர் பஸ் பற்றி கோயம்புத்தூர் விழா தலைவர் ராகுல் கூறியதாவது:- 

கோவையின் உற்சாகத்தை கொண்டாட கூடிய கோயம்புத்தூர் விழாவில் இம்முறை இரண்டு டபுள் டக்கர் பஸ்கள் அறிமுகம் செய்து உள்ளோம். இதனால் அதிகப்படியான மக்கள் இந்த அட்டகாசமான பயணத்தை மேற்கொள்ள முடியும்.

இந்த டபுள் டக்கர் பஸ்களில் பயணம் செய்ய மக்கள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. நாங்கள் உருவாக்கிய செயலியில் முன்பதிவு செய்தாலே போதுமானது.

 

இந்த பேருந்துகள் 6 வழித்தடங்களில் இயங்க உள்ளன. வ.உ.சி பூங்காவில் இருந்து அவிநாசி சாலை, திருச்சி ரோடு, கணபதி மேம்பாலம், கிராஸ்கட் சாலை, காந்திபுரம், மேட்டுப்பாளையம், கவுண்டர் மில்ஸ், போன்ற பல இடங்களுக்கு இந்த பேருந்துகளில் மக்கள் முன்பதிவு செய்துவிட்டு இலவசமாக பயணம் செய்யலாம்.

 

எங்கள் செயலியிலேயே எங்கே ஏற வேண்டும் எங்கே இறங்க வேண்டும் என்கின்ற விவரங்கள் அடங்கி இருக்கும். ஒரு பயணத்தில் 30 பயணிகள் வரை பங்கேற்கலாம். ஒரு பயணம் போக்குவரத்து நெரிசலை பொறுத்து 30 நிமிடம் முதல் 45 நிமிடங்கள் வரை நீடிக்கும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த பேருந்துகள் இயங்கும். 

 

இதில் ஒரு முக்கிய சிறப்பு என்னவென்றால் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்ற பொழுது எந்த பேருந்தில் ஏறி வெற்றி பயணம் சென்றார்களோ அதே பேருந்தில் தான் பொதுமக்களும் இம்முறை கோவில் விழா சார்பில் கோவை சுற்றி பார்க்க உள்ளனர்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

 

கோவையின் அழகை வேறு கோணத்திலிருந்து பார்ப்பதற்கு இந்த  பயணம் நிச்சயமாக வழிவகுக்கும் என்று இந்த பேருந்து சேவையை துவக்கி வைத்த பின்னர் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

வெளிப்படை தன்மையுடன் முன்பதிவு செய்வதற்கான பிரத்தியேக தளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக கோயம்புத்தூர் விழா குழுவிற்கு கோவை மாவட்ட ஆட்சியர் தனது வாழ்த்துக்களை தெரிவித்து, இம்முறை இந்த பயணங்களை அதிகப்படியான மக்கள் மேற்கொள்வார்கள் என்று கூறினார். 

இந்த இலவச பேருந்து பயணத்திற்கு முன்பதிவு செய்வதற்கான இணையதள முகவரி: bit.ly/doubletakkar