இன்றைய உலகம் நவீனம் ஆகி சென்று கொண்டே இருக்கும் நேரத்தில், சில அவசியமான இடங்களில் அக்கறையுடன் இருக்காமல் அலட்சியமாக இருக்கும் வழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. 

ஒரு நாளைக்கு போதிய அளவு ஒய்வு, தண்ணீர், உணவு எடுக்கவேண்டும் என்பது தெரிந்தும் இதுபோன்ற  அவசியமானவற்றில் அசால்ட்டாக இருந்துவிடுகிறோம். இதனால் பின்நாட்களில் பெரிய பாதிப்புகள் வரலாம்.

சமீபத்தில் எக்ஸ் தளத்தில் மிகவும் பிரபலமான தனியார் மருத்துவமனையை சேர்ந்த நரம்பியல் துறை மருத்துவர் டாக்டர் சுதிர், மனிதர்கள் எந்த வயதுக்கு எவ்வளவு நேரம் சராசரியாக உறங்கவேண்டும் என்பதை பகிர்ந்துகொண்டார்.இது பல நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகவே உள்ளது.

அவர் பகிர்ந்துகொண்டது : 

3 மாதம் வரை உள்ள புதிதாக பிறந்த குழந்தைகள் - 14 முதல் 17 மணி நேரம் வரை. 
4 முதல் 12 மாதம் வரை உள்ள குழந்தைகள் -  சிறு உறக்க நேரங்கள் சேர்த்து 12 முதல் 16 மணி நேரம் வரை.
1 முதல் 5 வயது உள்ள இளம் குழந்தைகள் - சிறு உறக்க நேரங்கள் சேர்த்து 10 முதல் 14 மணி நேரம் 
6 முதல் 12 வயது வரை உள்ள சிறுவர்கள் - 9 முதல் 12 மணி நேரம்.
13 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்கள் - 8 முதல் 10 மணி நேரம் .
18 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள வர்கள் 7 முதல் 9 மணி நேரம் வரை.

இது தனிப்பட்ட நபர்களின் ஆரோக்கியம் மற்றும் உடல் தேவைக்கு ஏற்ப மாறுபடும். இது சராசரி அளவு என்பது குறிப்பிடத்தக்கது.


போதிய உறக்கம் இல்லை என்றால் என்ன பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது?

பொதுவாகவே ஒருவர் போதிய அளவு தூங்காமல் இருந்து வந்தால் அவருக்கு கவனக்குறைபாடுகள், மனநிலை தொந்தரவுகள், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் ஆகுதல் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது என மருத்துவ நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர். தொடர்ச்சியாக போதிய நேரம் தூங்காமல் இருந்தால், ஹைப்பர் டென்சன், 
இதய நோய், சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் மனது சம்மந்தமான பாதிப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.  

எனவே உங்கள் ஆரோக்கியத்தின் மேல் கவனம் செலுத்துங்கள் மக்களே.