கோவையில் உள்ள ஒரே ஐ.டி. பூங்காவின் 6 தளங்களையும் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான Infosys எடுத்துக்கொண்டு அதன் பல்வேறு பணிகளை இங்கிருந்து செய்து வருகிறது என்றால் நம்ப முடிகிறதா?
கோவை காளப்பட்டி பகுதியில் தென்னிந்தியாவின் மிகப்பெரும் தொழில் குழுமங்களில் ஒன்றான பண்ணாரி அம்மன் குழுமத்திற்கு சொந்தமான SVB TECH PARK அமைந்துள்ளது. 2023ல் திறக்கப்பட்ட இதில் 10 தளங்கள் உள்ளன.
மொத்தம் 2.4 லட்சம் சதுரடி பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் 6 தளங்களை Infosys நிறுவனமே எடுத்துக்கொண்டுள்ளது. மீதம் உள்ள 2 தளங்களை அமெரிக்க கன்சல்டண்சி மற்றும் சாப்ட்வெர் தயாரிப்பு நிறுவனமான Deloitte எடுத்துள்ளது. மற்றொரு தளத்தை மஹிந்திரா குழுமம் எடுத்துள்ளது.
இதற்கடுத்து SVB TECH PARKன் இரண்டாம் கட்ட திட்டத்தில் 2.6 லட்சம் சதுரடிக்கு அதே பகுதியில் IT பூங்கா விரிவாக்கம் நடைபெற்றது. இது தற்போது வெற்றிகரமாக கட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. முதல் கட்டத்தில் 2.4 லட்சம் சதுரடி, இரண்டாம் கட்டத்தில் 2.6 லட்சம் சதுரடி என இப்போது வரை மொத்தம் 5 லட்சம் சதுரடி கொண்ட IT பூங்கா வாக உள்ளது SVB TECH PARK. இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த புது வளாகத்தில் உள்ள 3 தளங்களையும் Infosys நிறுவனமே எடுத்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கடுத்து உருவாகி வரும் IT பூங்காக்கள்:
Wynfra சைபர் சிட்டி என்ற பெயரில் கோவையில் IT துறையில் புரட்சி செய்த KGiSL குழுமம், BNR Infra எனும் நிறுவனத்துடன் கூட்டமைத்து ரூ.1000 கோடி மதிப்பில் 9 ஏக்கர் நிலத்தில் கீரணத்தம் பகுதியில் உருவாக்கிவருகிறது . தரைதளத்துடன் 10 மாடிகள் தலா 2 இடங்களில் அமைக்க திட்டமிட்டு பணிகள் ஆரம்பமாகி உள்ளது. மொத்தம் 3 கட்டங்களாக உருவாகும் இந்த IT சிறப்பு பொருளாதார வளாகம் அதன் முதல் கட்ட பணிகளை 2025 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.
மலுமிச்சம்பட்டி பகுதியில், L&T டெக் பார்க் சுமார் 1.85 மில்லியன் சதுர அடி நிலப்பரப்பில் அமைகிறது. அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஆதித்யா கன்வென்ஷன் சென்டர் தற்போது ஒரு அதிநவீன அம்சங்கள் கொண்ட 3 லட்சம் சதுரடி கொண்ட ஐ.டி. பூங்காவாக மாறி உள்ளது.
கே.ஜி. குழுமத்தை சேர்ந்த TOWN & CITY DEVELOPERS நிறுவனம் கோவை அவிநாசி சாலையில் 3 ஏக்கர் நிலத்தில் குறைந்தது 10 தளங்கள் கொண்ட சிறப்பு அம்சங்கள் கொண்ட TNCDTechPark எனும் தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை உருவாக்க உள்ளது.
சரவணம்பட்டி பகுதியில் TANNY SHELTERS எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் 2 இடங்களில் தலா 12 மாடிகள் கொண்ட IT பூங்காவை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதுபோல பல திட்டங்களை தனியார் துறையினர் முன்னெடுத்தும் முன்னெடுக்கவும் உள்ளனர்.
நிலம் கிடைப்பதால் மட்டுமே இந்த அளவு பூங்காக்கள் உருவாகின்றனவா?
இல்லை. அதற்கு வேறு ஒரு காரணம் உள்ளது. கோவையில் IT துறைக்கு தேவையான திறமை மிகு மாணவர்கள் கிடைப்பதுமே ஒரு காரணமாக இருப்பதால் தான் இங்கு IT நிறுவனங்கள் தொடர்ந்து வருகை புரிந்தும், அவர்களின் வளாகங்களை விரிவாக்கம் செய்தும், தனியார் IT பூங்காக்களில் இடத்தை தேர்வு செய்தும் வருகின்றனர்.
தமிழ் நாட்டில் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் 400க்கும் அதிகமான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் 2024-25 ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு நடந்து வருகிறது. இதில் வேறு எந்த பாடப்பிரிவை காட்டிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு படிப்புகளே மாணவர்களின் முதல் தேர்வாக இருந்துள்ளது என்பது அண்மையில் தெரியவந்தது.
இந்த கலந்தாய்வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு படிப்புகளில் இதுவரை 55.30% இடங்கள் நிரம்பியுள்ள. இதற்கு அடுத்து தான் பிற பொறியியல்/தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள் உள்ளன.
கோவை CIT, PSG Tech, PSG iTech, Sri Krishna College of Engineering and Technology, GCT உள்ளிட்ட கல்லூரிகளில் 100% இடங்கள் நிரம்பி உள்ளது எனவும் KCT, KPR, Sri Krishna College of Technology, Sri Shakthi Institute of Engineering & Technology, Sri Ramakrishna Engineering College, Karpagam College of Technology, Kathir Engineering College, Nehru College of Engineering and Technology, Hindusthan College of Technology உள்ளிட்ட கல்லூரிகளில் 95% க்கு அதிகமான இடங்களும் நிரம்பியுள்ளது என தகவல்கள் கூறுகின்றன.
கோவை மாநகரில் உள்ள மேற்கண்ட கல்வி நிறுவனங்களில் பயில மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் போட்டிபோட்டு படித்து வருகின்றனர். இங்கு கற்கப்படும் கல்வி தரமாக இருப்பதாலும், இங்கு IT துறைக்கு ஏற்ற சூழல் இருப்பதாலும் இங்கு IT துறை வளர்ச்சி வரும் ஆண்டுகளில் நன்றாக இருக்கும் என்ற எதிர்பாக்கலாம்.