கோவை வனச்சரகத்தில் அட்டுக்கல் முதல் பொம்மணம்பாளையம் வரை 5 கிலோ மீட்டர் தொலைவிற்கும் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரும்பள்ளம் முதல் தேவராயபுரம் வரை 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு உருக்கு கம்பி வேலி அமைக்கும் பணியை வனத்துறை துவங்கியது.

இது யானைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என எதிர்ப்பு தெரிவித்து விலங்கின ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்த்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் நீதிபதி சதீஷ்குமார் மற்றும் பரத சக்கிரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வேலி அமைக்கும் இடங்களை நேரில் ஆய்வு செய்வதாக தெரிவித்தனர்.

இதனடிப்படையில் இன்று வேலி அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழுவினர் நேற்றிரவு சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வந்தடைந்தனர்.

இதற்கு முன்னர் நீதிபதி சதீஷ்குமார் தலைமையில் ஆய்வுக்கு வந்த நீதிமன்ற குழுவினர் மேட்டுப்பாளையத்தில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளை ஆய்வு செய்து பின் சில உத்தரவுகள்/வழிகாட்டுதல்கள் வழங்கினார். அவை பின்பற்றப்பட்டுள்ளதா என இன்று ஆய்வு துவங்கியதும் முதலில் கவனிக்கப்பட்டது.

அதையடுத்து வனத்தை ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பின்புறமுள்ள யானை தடுப்பு அகழிகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் கல்லார் பகுதியில் வனத்தை ஒட்டியுள்ள சச்சிதானந்தா ஜோதி நிகேத்தன் எனும் தனியார் பள்ளியின் பின்புற வனப்பகுதிகளை ஆய்வு செய்து வனத்திற்கும் பள்ளி சுற்றுச்சுவருக்கும் இடைப்பட்ட இடத்தை யானைகளுக்கு தொல்லை ஏற்படாத வகையில் நிலத்தை மேடு பள்ளங்களாக இல்லாமல் மட்டமாக மாற்றி அமைக்க உத்திரவிட்டனர். வன எல்லையில் அமைக்கப்பட்டுள்ள யானைகள் தாகம் தீர்க்க கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியை பார்வையிட்டனர்.

இதன் பின்னர் யானைகள் நடமாட்டம் உள்ள  கல்லார் அரசு தோட்டக்கலை பழப்பண்ணையை ஆய்வு செய்தனர்.அப்போது கல்லார் பழப்பண்ணையில் ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வின் போது அங்கிருந்த சிறுவர் பூங்கா மற்றும் கழிப்பிட கட்டிடத்தை அகற்ற சொல்லியிருந்தது நடைமுறை படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர்.மேலும், தோட்டக்கலை மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி சில ஆலோசனைகளை வழங்கினர்.பின்னர் மதியம் ஆய்வு பணியை தொடர கோவைக்கு புறப்பட்டு சென்றனர்.

கள ஆய்வு செய்த நீதிபதிகள் உடன் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், தலைமை வன பாதுகாவலர் சீனிவாச ரெட்டி, வன உயிரின காப்பாளர் ராகேஷ்குமார் டோக்ரா, ஆணைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட காவல்துறை எஸ்.பி கார்த்திகேயன், மாவட்ட வன அலுவர் ஜெயராஜ் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.