இதனால் தான் கோவை பீளமேடு ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதை வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது!
- by admin
- Sep 05,2025
பீளமேடு ரயில்வே மேம்பாலத்தில் சுரங்கப்பாதை இப்போது வரை இல்லாதது துயரத்தை ஏற்படுத்துகிறது எனவும், சுரங்கப்பாதை அமைக்காத ரயில்வே கோட்ட நிா்வாகத்தைக் கண்டித்து இம்மாத இறுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக பீளமேடு கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் பூ.வெ.கோபால் பேசியபோது அவர் கூறியதாவது :
பல கால கோரிக்கைகள், போராட்டங்களுக்கு பின்னர் பீளமேடு ரயில்வே மேம்பாலம் ரூ.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இது கடந்த 2017ம் ஆண்டில் திறக்கப்பட்ட பிறகும் இன்று வரையிலும் சுரங்கப்பாதை அமைக்கப்படவில்லை. இதனால் தண்டவாளத்தைத் தாண்டிச் சென்ற 27 போ் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனா்.
சுரங்கப்பாதை வேண்டுமென தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அந்த பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது ஆனால் பணிகள் இப்போது வரை துவங்காமல் உள்ளது. எனவே பீளமேடு ரயில்வே பாலத்தின் அடியில் சுரங்கப்பாதை அமைக்காத ரயில்வே கோட்ட நிா்வாகத்தை கண்டித்து வரும் 29ம் தேதி தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட பீளமேடு கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பினர் முடிவு செய்து உள்ளோம்.
மேலும் கோவை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பீளமேடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு பிளாட்பாரம் நீட்டிப்பு தேவை என்பதால் அதை செய்ய எஸ்டிமேட் தயாராகி உள்ளது என 2023ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு இப்போதுவரை அதற்கான பணிகளை தொடங்கவில்லை.
சுரங்கப்பாதை அமைக்கவேண்டும், தேவைப்படும் இடத்தில் சர்வீஸ் சாலை அமைக்கவேண்டும் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பீளமேடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என 29.9.25 நடைபெறும் ஆா்ப்பாட்டத்தின்போது வலியுறுத்த உள்ளோம். இதற்கான அனுமதியை பெற்றுள்ளோம். இதை தொடர்ந்து விரைவில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் அவர்களை சந்திக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.