வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு இறைச்சி கழிவுகளை எடுத்துவருவதற்கு பதில் இந்த யோசனையை செயல்படுத்த மக்கள் கோரிக்கை!
- by David
- Apr 29,2025
கோவை மாநகரில் உருவாகும் கோழி இறைச்சி கழிவுகள் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் வைத்து முன்பு மேலாண்மை செய்யப்பட்டு வந்த நிலையில், அதனால் சுற்றுப்பகுதிகளில் ஏற்பட்ட துர்நாற்றம் மற்றும் சில காரணங்களால் மேலாண்மை பணியை அங்கு செய்ய அனுமதி பெற்ற நிறுவனம் அங்கு செயல்பட செய்யப்பட்ட ஒப்பந்தம் மார்ச் 30, 2025 அன்று ரத்து செய்யப்பட்டது.
இதற்கு பின்னரும் அங்கு இறைச்சி கழிவுகள் எடுத்துவரப்படுகிறது. அவ்வாறு கொண்டுவரப்படும் கழிவுகள், அங்கிருந்து வேறு இடங்களில் இப்படிப்பட்ட கழிவுகளை மேலாண்மை செய்யும் வசதி கொண்ட மையங்களுக்கு எடுத்துச்செல்வதாக தகவல் ஒருபக்கம் இருந்தாலும், ஞாயிறுகளில் உருவாகும் கழிவுகள் பெருமளவு அங்கிருந்து எடுத்து செல்லப்படுவது இல்லை என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் பேசுகையில், அவர் கூறியதாவது :
இறைச்சி கழிவுகள் ஞாயிறு அன்று மட்டும் சுமார் 20 டன் அளவுக்கு உருவாகிறது என நாங்கள் விசாரித்ததில் தெரிந்து கொண்டோம். அதை குப்பை கிடங்கிற்கு கொண்டுவந்தாலும், இங்கிருந்து வேறு இடங்களில் உள்ள மேலாண்மை மையத்திற்கு அப்படியே எடுத்து செல்வது இல்லை. சில டன் கழிவுகள் இங்கேயே புதைக்கப்படுகிறது.
தினமும் இதுபோன்ற கழிவுகள் இங்கு எடுத்துவரப்படுகிறது. இதை இங்கிருந்து தாமதாக எடுத்து செல்லும் பட்சத்தில் இதை நாய்கள், கழுகுகள் எடுத்து சென்று உண்ணும். சில கழிவுகள் இங்கிருந்து இவையால் பிற இடங்களுக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. இதனால் நோய் தோற்று ஏற்படலாம்.
மேலும் இறைச்சி கழிவுகள் புதைக்கப்படுவதால் குப்பை கிடங்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீரின் தன்மையை அது கடுமையாக பாதிக்கும் என நாங்கள் அரசு அதிகாரிகளுக்கு கடிதமாக வழங்கி தெரிவித்து இதை தடுக்கவேண்டுமாய் கேட்டுக்கொண்டு வருகிறோம்.
வரும் நாட்களில் கோவை மாநகரின் 5 மண்டலங்களில் உருவாகும் இறைச்சி கழிவுகளை இங்கே எடுத்து வராமல், குப்பை மாற்று மையம் போல இந்த கழிவுகளை அந்ததந்த மண்டலத்தில் ஒரு தனி இடத்தை உருவாக்கி அங்கிருந்து மொத்தமாக வாகனங்களில் இந்த கழிவுகளை மேலாண்மை செய்யும் இடத்துக்கு எடுத்து செல்ல முயற்சி எடுத்தால், எங்கள் பகுதிக்கு மிகவும் பயனுள்ளதாக, பாதுகாப்பான முடிவாக அது இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
படங்கள் : சிறப்பு ஏற்பாடு