இனி மொபைல் நம்பர் சொல்ல சொல்லி யாரும் வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்த முடியாது!
- by David
- Aug 27,2025
ஒரு சூப்பர்-மார்கெட்டிலோ அல்லது நவீன துணி கடைகள், துரித உணவகங்களிலோ வாடிக்கையாளர்கள் பொருட்கள், உனவு வாங்கும் போது, பில்லிங் தேவைகளுக்காக உங்கள் மொபைல் எண் வேண்டும் என அவர்களின் மொபைல் எண் பெறப்படுகிறது.
சில கடைகளில் டிஸ்கவுண்ட் ஆஃபர் வழங்க மொபைல் நம்பர் வேண்டும் எனவும் கூறப்பட்டு அவை பெறப்படுகிறது. மொபைல் நம்பர் வழங்கப்படவில்லையென்றால் பில் போட முடியாது, நீங்கள் பொருட்களை/ சேவைகளை பெற முடியாது என்றெல்லாம் கூட சில நிறுவனங்கள் சொல்லும் நிலை உள்ளது.
பொது வெளியில் இதுபோன்ற சம்பவங்கள் பல உள்ளன.மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரபல பாராளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா-வுக்கு கூட இதுபோன்ற சம்பவம் 2022ல் நடைபெற்றது.
ஆனால் இனி தனியார் விற்பனை நிறுவனங்கள் இனி இப்படி வாடிக்கையாளர்களிடம் மொபைல் நம்பர் கேட்டு கட்டாயப்படுத்த முடியாது. இதை தடுக்கும் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் இந்தியா முழுவதும் மிக விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
இதன் படி, ஒரு வாடிக்கையாளர் தனது மொபைல் நம்பரை கொடுக்க தான் விரும்பவில்லை என்றால், சேவைகளை வழங்க முடியாது என தனியார் விற்பனை நிறுவனங்கள் கூறமுடியாது.
ஒருவேளை மொபைல் நம்பர் வழங்க வேண்டியது மொபைல் ரீச்சார்ஜ், டிக்கெட் முன்பதிவு போன்ற அவசிய சேவைகளுக்கு தேவை என்றால் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள், ஒருவரின் மொபைல் நம்பர் பெறப்படும் காரணத்தை வாடிக்கையாளர்களிடம் தெளிவாக கூறவேண்டும். மேலும் எப்போது வரை அது அந்த நிறுவனத்தின் சிஸ்டத்தில் இருக்கும், எப்போது நீக்கப்படும் என்பதையும் கண்டிப்பாக கூறவேண்டும்.
பொது இடங்களில் மொபைல் நம்பரை சொல்ல சொல்ல கூடாது. அதற்கு பதில் அவர்களை பதிவிட செய்ய கேட்டுக்கொள்ளலாம். பில் அனுப்ப தான் மொபைல் நம்பர் தேவை என்றால், வாடிக்கையாளர் அதை கொடுக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்றால், அதற்கு மாற்றாக இ-மெயில் அல்லது பிரிண்ட் செய்த பில் போன்ற மாற்று முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
வாடிக்கையாளர் மொபைல் நம்பரை கொடுக்க சம்மதித்தால், அதை இந்த சட்டம் குறிப்பிடும் காலம் வரை (3 ஆண்டுகள்) வைத்திருக்கலாம். ஒருவேளை வாடிக்கையாளர் தனது மொபைல் நம்பரை தனியார் நிறுவனங்கள் வைக்க விரும்பவில்லை என பின்நாட்களில் கூறி முறையிட்டால், அந்த நம்பரை அவர்கள் நீக்கிக்கொள்ளவேண்டும்.
குடியிருப்புகளில் தங்கியுள்ளவர்களை காண வரும் விருந்தினர்களிடம் இது போல மொபைல் நம்பர் பெறப்படுகிறது என்றாலும் கூட, அது ஏன் பெறப்படுகிறது? எப்போது வரை பதிவு வைக்கப்படும்? என்பதை அறிவிக்கவேண்டும். முக்கியமாக, இந்த தகவல் பிறருக்கு விற்கப்படாது என்பதை உறுதி செய்யவேண்டும் என இந்த சட்ட விதிகள் கூறுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒருவரின் மொபைல் நம்பர் என்பது தனிப்பட்ட தகவல். இந்த சட்டம் மூலம், அந்த தனிநபர் தகவல் தேவையற்ற விளம்பர, வணிக நிறுவனங்கள் கைகளுக்கு செல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சட்டத்திற்கு சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை சுமூகமாக மாறுவதற்கு போதுமான கால அவகாசம் வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.