ஒருவழியாக 2022ன் இறுதிக்கு வந்துவிட்டோம்.

 

 ஒரு ஆண்டில் மொத்தம் 5 லட்சத்து 25 ஆயிரம் நிமிடங்கள் உள்ளது.இந்த ஆண்டில் இத்தனை நிமிடங்களில் எத்தனையோ நடந்திருக்கும்.

 

கோவை மாநகரில் வசிக்கும் நம்மை சுற்றி நடந்த சில முக்கிய நிகழ்வுகளை 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் உங்கள் முன் இந்த கட்டுரை கொண்டுவந்து நிறுத்தும். ஆரம்பிக்கலாமா!

 

மனவளா்ச்சி குன்றியவா்களுக்கும் எழுத்தறிவித்த இறைவி!

கோவை, துடியலூரில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் மனவளா்ச்சி குன்றியவா்களுக்கான வித்ய விகாஷினி வாய்ப்புகள் சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 8 ஆண்டுகளாக ஆசிரியையாகப் பணியாற்றி வருபவா் பாவை ஜோதி. 

இவரது சேவையை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் மனவளா்ச்சி குன்றியோா்களுக்கு கற்பிக்கும் ஆசிரியா்களில் சிறந்த ஆசிரியருக்கான தமிழக அரசின் விருது  இவருக்கு இந்தண்டு வழங்கப்பட்டுள்ளது.

 

வரலாற்றில் இடம் பிடித்த பெண்கள்!

கோவையின் முதல் பெண் மேயராக மார்ச் 2022ல் பொறுப்பேற்றார் கல்பனா ஆனந்தகுமார்.

கிட்டத்தட்ட அதே காலத்தில் தான் தமிழக ஆளுநரால் புதிய துணைவேந்தராக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார் பேராசிரியர் கீதாலட்சுமி.  

தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் முதல் பெண் துணைவேந்தர் இவர்தான். கோவையின் நிர்வாகம்  மற்றும் கல்வி துறையின் முக்கிய பொறுப்புகளில் பெண்கள் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியே!

இவர்கள் வரிசையில் ...கோவையை சேர்ந்த  40 வயதான வீட்டு வேலை செய்யும் மாசிலாமணி என்பவர் இந்தாண்டு தமிழ் நாடு பவர் லிப்டிங்  சங்கம் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான பவர் லிப்டிங்  போட்டியில்  கலந்து கொண்டு 77.5 கிலோ எடையை தூக்கி தங்க பதக்கம் வென்றார்.

தாயை பார்த்து ஊக்கமடைந்து தரணியும் பயிற்சி எடுத்துக்கொண்டார். அதன் விளைவாக  இன்று அவர்கள் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்கள் வென்றுள்ளனர்.   மாசிலாமணிக்கு உதவ முன்வந்தது அவர் வேலை பார்த்த வீட்டு உரிமையாளர்களே!


காம்பிளான் பாயாக வளரும் கோவை!

கோவை பெருநகர வளர்ச்சிப் பகுதியின் வரைவு பெருந்திட்ட அறிக்கை மற்றும் வரைபடம் குறித்த கருத்துகேட்பு கூட்டம் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலர் ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் இந்தாண்டு நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சியுடன் 4 நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 67 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு பெருநகர வளர்ச்சிப் பகுதி 1.531.53 சதுர கிலோ மீட்டராக விரிவு படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 

ம்ம்ம்ம்... வளர்கிறது கோவை பெருநகரம்.

 

கணேசா!

கோவையில் 2022ன் முதல் 3 மாதங்களிலேயே 7 யானைகள் இறந்தன என்பது உங்களுக்கு தெரியுமா?  இதுபோல் பல சம்பவங்கள் 2022ல் நடைபெற்றது.

 

அக்டோபர் மாதம்  கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு இடையே இருக்கும் வனப்பகுதியில் உள்ள கஞ்சிக்கோட்டில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது. 

யானைகள் அடிக்கடி ரயில் பாதையை கடக்கும் இடங்களில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதனைத்தொடர்ந்து இரயில்வே நிர்வாகம் ரூ.7.49 கோடி ஒதுக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளைச் செய்து வருகிறது.

 

சரி சரி கப்பு ரெண்டுபேருக்கும் தான் பா!

கோவையில் ஒரு பெரிய கிரிக்கெட் மேட்ச் நடக்கணும் அப்போ நம்மளும் தொலைக்காட்சியில் வரணும் என்று ஏங்கிய பலரையும் OTTயில் வரவைத்து TNPL 2022.

 இறுதிச்சுற்றில் மோதிய சென்னை மற்றும் கோவை அணிக்கு கோப்பைகள் பகிர்ந்து அளிக்கப்பட்டன. காரணம் என்ன தெரியுமா? மழை தான்! 

 

கோவையில் சதமடித்த 'விக்ரம்'! ... கமல்? 

பல ஆண்டுகளுக்கு பின்னர் 'விக்ரம்' திரைப்படம் மூலமாக வணீக ரீதியாக பெரும் வசூல் சாதனை படைத்தார் கமல்.

 

 செப்டம்பர் 2022 அன்று கோவை கே.ஜி. திரையரங்கில் 'விக்ரம்' திரைப்படத்தின் 100 வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.  நிகழ்வில் கமல் "எனக்கு பிடித்த ஊர் கோவை" என்றார்.

தனக்கு மிகவும் பிடித்த ஊரில் தேர்தல்கள் இல்லாத போது மெய்யான மய்ய அரசியல் முயற்சிகளை கமல் செய்வதை பார்க்கவும் மக்கள் காத்திருக்கின்றனர் ஆண்டவரே!!! 

 

வணிகத்தில் அடுத்த அத்தியாயம்!

இந்திய தொழில் கூட்டமைப்பின் கோவை கிளை கோவை மாநகரத்தை ஒரு துடிப்பான பொருளாதார இடமாக மாற்ற, 'கோயம்புத்தூர் நெக்ஸ்ட்' என்ற திட்டத்தை  தொடங்கியது.

கோயம்புத்தூர் நெக்ஸ்ட் என்பது இந்த பகுதியின் வணிக மற்றும்  பொருளாதார திறனை மேம்படுத்த செய்வதோடு, இந்த பகுதி தொழில்களை ஆசியா மற்றும் உலக சந்தையில் உயர செய்ய எடுக்கப்பட்டுள்ள பெரும் முயற்சி. 

 

விரைவாக வந்த நல்ல இருக்கும்!

கடந்த ஆட்சியில் 2020 ஜனவரி மாதம்  துவங்கப்பட்ட வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டம் கொரோனா ஏற்படுத்திய கால தாமதத்தால் அப்படியே நின்று போனது. பல கோடி ரூபாய் செலவு செய்து பாதியில் நிற்கும் இந்தத் திட்டம் தற்போது அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. 

"கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் தான் வெள்ளலூர் பேருந்து நிலையம் செயல்படுத்தப்படும்," என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

 

பொதுமக்களுக்கு பயன்படும் படி இந்த திட்டம் ஒரு நல்ல இடத்தில 2023ல் அமையவேண்டும். அத்துடன் அந்த பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கினால் ஏற்படும் தொல்லையும் தீர்ந்தால் மகிழ்ச்சியே.  

 

நாலவதுடன் நின்றது! 

திருச்சி சாலையில் ரெயின்போ பகுதியிலிருந்து அல்வேர்னியா பள்ளி வரை 3.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கோவை-திருச்சி சாலையில் ரூ.253 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டு ஜூன் 2022ல் திறக்கப்பட்ட திருச்சி சாலை மேம்பாலத்தில் வெறும் 2 மாதங்களுக்குள் 4 முறை விபத்து நடைபெற்றது. 

இரண்டு பேர்  தடுப்புச்சுவரில் மோதி 40 அடி உயரத்திலிருந்து வாகனத்திலிருந்து தூக்கி கீழே வீசப்பட்டு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னர் எடுத்த நடவடிக்கையால் விபத்து சம்பவங்கள் அங்கு குறைக்கப்பட்டு இருக்கிறது.

 

உயிர் காத்திட...

கல்வி மூலமாக சாலை பாதுகாப்பு பற்றி அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் நோக்கிலும் கோவை சாலைகளை பாதுகாப்பானவையாக மாற்ற தமிழக அரசு மற்றும் கோயம்புத்தூரில் இயங்கி வரும் உயிர் அறக்கட்டளை இணைந்து 'குட்டி காவலர்' என்ற சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை அக்டோபர் மாதத்தில் துவக்கினர்.

கோவை கொடிசியா வளாகத்தில் 4,500 மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அவர்களுடன் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 4.20 லட்சம் மாணவர்கள் ஆன்லைன் முறையில் சாலை பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்றனர். 


ஒரே கச்சேரி தான்

இளையராஜா, அனிருத், சித் ஶ்ரீராம்,  யுவன் சங்கர் ராஜா... ப்பா என்ன யா இது போய்டே இருக்கு.

20000-40000 பேர் இந்த கச்சேரிகளுக்கு விருப்பத்துடன் வருகின்றனர். கோவையில் கச்சேரிக்கு 2022ல் ஒரு பஞ்சமும் இல்லை. எல்லாம் பரவசமே!

 

யாருப்பா இன்ஃபோசிஸா? வாங்க வாங்க!

சென்னையைத் தொடர்ந்து கோவை மாநகரம் தகவல் தொழில்நுட்ப மையமாக உருவாகி வருகிறது. 
ஏற்கனவே, கோவையில் காக்னிசென்ட், அமேசான், ஹெச்சிஎல், விப்ரோ, டி.சி.எஸ் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் கால் பதித்துள்ள நிலையில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான இன்ஃபோசிஸ் (Infosys) கோவையில் அலுவலகம் அமைப்பதற்கு நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.காளப்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஐடி பூங்காவில் இன்ஃபோசிஸ் அமைகிறது. இத்துடன் பல வெளிநாட்டு நிறுவனங்கள் கோவையை நோக்கி 2022ல் வந்தது. காரணமாக சொல்லப்படுவது இங்கு உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் மூலம் பயின்று திறமை மிகுந்தவர்களாக வெளிவரும் மாணவச்செல்வங்களும் இங்குள்ள உட்கட்டமைப்புமே. வேகமா வளர்ந்துவரும் ஐ.டி. மாநகரமாக உருவெடுக்கும் கோவை! பெருமை தானுங்க!

 


மறந்துட்டியா!

நம்மை விட்டு கொஞ்ச காலம் விலகி சென்ற கொரோனா மீண்டும் எட்டி பார்க்கிறது. இதை எட்டி உதைத்து வெளியே தள்ள உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.



அனைவருக்கும் வரப்போகும் 2023 ஆக்கபூர்வமானதாக அமைய COVAI CHRONICLE -ன் வாழ்த்துக்கள்.