கோவை சோமனூர் - கருமத்தம்பட்டி பகுதியில் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வை  வழங்க வேண்டும் என வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கடந்த மார்ச் 19ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்திலும், ஏப்ரல் 11 (வெள்ளி) முதல் 5 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று விசைத்தறி உரிமையாளர்களை அழைத்து பேசிய கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் 2022ம் ஆண்டில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கிய கூலியில் இருந்து 7% உயர்த்தி வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஆனால் விசைத்தறி உரிமையாளர்கள் கேட்டது 2022 கூலியில் இருந்து 30% உயர்வு எனவும், இப்போது உள்ள மின் கட்டணம், பணியாளர்களுக்கான கூலி, உற்பத்தி தொடர்பான செலவுகளை கணக்கில் கொண்டு 30% உயர்வை அவர்கள் கேட்டுள்ளதாகவும், 7% உயர்வு தங்களுக்கு பயனளிக்காது என்பதால் ஒரு நியாயமான கூலி உயர்வு உறுதிசெய்யப்படும் வரை தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து, செவ்வாய்க்கிழமை இரவு முதலே விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளனர். 

அரசு விரைவாக இப்பிரச்சனையில் தலையிட்டு கூலி உயர்வு பெற்றுக் கொடுக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.