கோவை விமான நிலையத்தில் கூடுதலாக 250 வாகனங்களை நிறுத்த இடம் தேர்வு!
- by David
- May 09,2023
கோவை விமான நிலையத்தை தினமும் 8000க்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்துகின்றனர். இங்கு வருபவர்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்த விமான நிலையத்தின் நுழைவுவாயில் அருகே தற்போது 200 கார்கள் நிறுத்தும் வகையில் இடவசதி உள்ளது.
அதிகப்படியானோர் விமான நிலையத்திற்கு வருவதால் பார்க்கிங் பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் விமான நிலைய நிர்வாகம் ஒரு முயற்சியை முன்னெடுத்துள்ளது.
இதுபற்றி கோவை சர்வதேச விமான நிலையத்தின் இயக்குநர் செந்தில் வளவன் கூறியதாவது:
நுழைவுவாயில் அருகே தற்போது 200 கார்கள் நிறுத்தும் வகையில் இடவசதி உள்ளது. நுழைவுவாயில் அருகே முன்பு இருந்த விமான நிலைய ஆணையக ஊழியர்கள் குடியிருப்பு இடிக்கப்பட்டு காலியிடமாக உள்ளது.
பயணிகள் நலனை கருத்தில் கொண்டு அந்த இடத்தில் வாகன நிறுத்துமிட வசதியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு தலைமை அலுவலகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. புதிய திட்டத்தால் கூடுதலாக 250 கார்களை நிறுத்த முடியும். அதுவரை வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதை தவிர்க்கவும் உடனுக்குடன் வாகனங்களை அப்புறப்படுத்தவும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.